பிலிப்பைன்ஸ் விமான விபத்து: இந்திய மாணவர், பயிற்சியாளர் உயிரிழப்பு!

 பிலிப்பைன்ஸ் நாட்டில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இந்திய மாணவர் ஒருவரும் அவரது பயிற்சியாளரும் உயிரிழந்தனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் இலோகோஸ் வடக்கு மாகாணத்தில் உள்ள லாவோக் நகரின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து செஸ்னா 152 எனப்படும் ஒரு சிறிய ரக பயிற்சி விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த விமானப் பயிற்சி மாணவரான அன்ஷும் ராஜ்குமார் மற்றும் அவருடைய பயிற்சியாளரும் பயணித்துள்ளனர். துகுகேராவ் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த விமானம், ககாயன் மாகாணத்தின் அல்காலா நகரிலிருந்து 64 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்ததாக பிலிப்பைன்ஸ் உள்நாட்டு விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மீட்புப் பணிகளை பிலிப்பைன்ஸ் அரசு தீவிரப்படுத்தியது. ஹெலிகாப்டர்களின் நடந்த தேடுதல் பணியில், விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. விமானத்தில் பயணம் செய்த அன்ஷும் ராஜ்குமார் மற்றும் அவருடைய பயிற்சியாளரின் உடல்களை மீட்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

கடந்த பிப்ரவரி மாதம், இதே செஸ்னா ரக விமானம் ஒன்று பிலிப்பைன்ஸின் மாயோன் எரிமலைப் பகுதியில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த நான்கு பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.