புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா – எதிர்கட்சிகள் புறக்கணிப்பு

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை வருகிற 28ம் தேதி பிரதமர் திறந்து வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், குடியரசுத்தலைவர் தான் நாடாளுமன்ற கட்டடத்தை திறந்துவைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.

இப்போது இருக்கும் நாடாளுமன்ற கட்டடம் 90 ஆண்டுகள் பழமையானது. அதனால், புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்ட வேண்டும் மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, 2020ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி அதற்கான அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.

தற்போது கட்டுமானப்பணிகள் முழுவதுமாக நிறைவடைந்திருக்கும் நிலையில் வருகிற 28ம் தேதி பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்ச்சிகள் குரல் எழுப்பியுள்ளன.

நாட்டின் முதல் குடிமகளான குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு தான் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்துவைக்க வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கட்டடம் என்பதால் எந்த அரசியல் சார்பும் இல்லாத ஒரு நபராக இருக்கும் குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதன் தொடர்ச்சியாக மம்தா பானர்ஜி, டி.ராஜா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திமுக எம்.பி திருச்சி சிவா அறிவித்திருக்கிறார்.