புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா! – பிரதமர் மோடி நெகிழ்ச்சி

நேற்று புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அனைத்து மத வழிபாடுகளிலும் பூஜைகள் நடைபெற்றன. பிரதமர் மோடி நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்தார்.

இந்தியாவின் ஜனநாயகமும் இறையான்மையும் இருக்கும் ஓரிடம் நாடாளுமன்ற. ஒட்டுமொத்த இந்தியர்களுக்கான குரல்கள் அங்கிருந்தே ஒலிக்கின்றன. அப்படி வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டு நூறு ஆண்டுகள் முடிந்திருக்கிறது.

வசதியின்மை, இடப்பற்றாக்குறை காரணமாக புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன் தொடர்ச்சியாக ரூ.1,250 கோடியில் சுமார் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.

நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. முக்கோண வடிவம் கொண்டுள்ள இந்தக் கட்டிடம், இந்தியாவின் பன்முகத்தன்மை, கலாசாரம், கட்டிடக்கலை, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என அத்தனை அம்சங்களும் நிறைந்து காணப்படுகிறது.

விழாவின் தொடக்கத்தில் வளாகத்தில் அமைந்துள்ள தேசப்பிதா மகாத்மா காந்தி சிலைக்கு பிரதமர் மோடியும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அப்போது நடந்த பூஜையில் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம், சீக்கியம், பவுத்தம் என அனைத்து மத பிரார்த்தனைகள் நடைபெற்றன. அவற்றைத் தொடர்ந்து புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பின்னர் சபாநாயகர் இருக்கையின் அருகே பாரம்பரியமிக்க தமிழ்நாட்டின் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் ஆட்சிமாற்றத்துக்கு அடையாளமாக பயன்படுத்தப்பட்ட செங்கோலை நிறுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாட்டின் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் தலைமையில் 21 ஆதீனங்கள் அணிவகுத்து வந்து பிரதமர் மோடிக்கு ஆசி வழங்கி, செங்கோலை அவரிடம் கொடுத்தனர். செங்கோலைப்பெற்று பிரதமர் மோடி வணங்கினார்.

நாதஸ்வர இசையும், வேத மந்திரங்களும் முழங்க செங்கோலை பிரதமர் மோடி ஊர்வலமாக எடுத்துச்சென்று, மக்களவையில் சபாநாயகர் இருக்கையின் வலது புறம் கண்ணாடிப்பெட்டியில் நிறுவி, தரையில் விழுந்து வணங்கினார். அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடியும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் குத்துவிளக்கேற்றினர். இந்த நிகழ்வின்போது, ‘வந்தேமாதரம்’ பாடல், நாதஸ்வரத்தில் இசைக்கப்பட்டது.

அதன் பின்னர், நாடாளுமன்ற கட்டுமானப் பணியில் இரவு, பகலாக ஈடுபட்ட தொழிலாளர்களைப் பிரதமர் மோடி கவுரவித்தார். அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மகிழ்ந்த பிரதமர், பரிசுப்பொருட்களையும் வழங்கி சிறப்பு செய்தார். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வாழ்த்து நண்பகல் 12 மணிக்கு விழாவின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் தொடங்கின. பிறகு 75 ரூபாய் நாணயமும், அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது.

அஞ்சல் தலை வெளியீடு முடிந்ததும், பிரதமர் மோடி விழாவில் பேசினார். அவர், “இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் 140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை. இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், இந்தியாவின் வளர்ச்சியுடன் உலகத்தின் வளர்ச்சிக்கு அழைப்பு விடுக்கும். இந்த நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பால், ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை, இந்தியாவின் உறுதியை, இந்திய மக்களின் உற்சாக உணர்வை, மரியாதையுடனும், நம்பிக்கையுடனும் பார்க்கிறது. இந்தியா முன்னோக்கி நடைபோடுகிறபோது, உலகமும் முன்னோக்கி நடை போடுகிறது” என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.