புற்றுநோய்க்கு தடுப்பூசி – அமெரிக்க விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு?

புற்றுநோயை கட்டுப்படுத்த அடுத்தகட்ட முயற்சியாக தடுப்பூசியாகதான் இருக்கும் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க நாட்டின் சியாட்டில் நகரில் செயல்பட்டு வருகிறது தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம். இதில் புற்றுநோயை தடுப்பதற்கான மருந்துகளை கண்டுபிடிக்கவும், அதற்கான சிகிச்சைகளில் என்ன மாதிரியான முன்னேற்றங்களை கொண்டுவரலாம் எனவும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த அந்த ஆராய்ச்சி மையம், புற்றுநோய் தடுப்பூசிக்கான ஆராய்ச்சி மிகப்பெரிய திருப்புமுனையை எட்டியுள்ளதாக அதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சியாட்டில் தேசிய புற்றுநோய் மையத்தின் மூத்த விஞ்ஞானியான டாக்டர் ஜேம்ஸ் குல்லி கூறுகையில், “புற்றுநோய் சிகிச்சையில் அடுத்த பெரிய முன்னேற்றம் தடுப்பூசியாக இருக்கும். பல ஆண்டுகளாக வரையறுக்கப்பட்ட வெற்றிக்கு பிறகு, தடுப்பூசி சிகிச்சையை உருவாக்கும் ஆராய்ச்சியில் மிகப்பெரிய திருப்புமுனையை எட்டியுள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் புற்றுநோய் சிகிச்சைக்கான தடுப்பூசிகள் வெளிவரலாம். இவை நோயைத் தடுக்கும் பாரம்பரிய தடுப்பூசிகள் அல்ல. மாறாக புற்றுநோய் கட்டிகளை சுருக்கவும், புற்றுநோய் மீண்டும் வராமல் தடுக்கவும் உதவும் தடுப்பூசிகளாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.