மெட்ரோ நகரங்களில் வாடகை வீடு தேடுவது எவ்வளவு சிக்கலான விஷயம் என்பது யாருக்கும் விவரிக்க தேவையில்லை வீடு அளவு, வாடகை, பார்க்கிங், தண்ணீர் பிரச்சனை, வீடு இருக்கும் ஏரியா என பல விஷயங்களை சமரசம் செய்துக்கொண்டு ஒரு வீட்டுக்கு சென்றால் வீட்டு ஓனருக்கும் நமக்கும் செட் ஆகாது.
எல்லாம் ஓகே ரொம்பவும் பிடித்துபோனால் வீட்டு ஓனர் ஏகப்பட்ட வாடகையை கேட்பார்கள். ஆனால் தற்போது வீட்டு ஓனர்களின் அட்டகாசம் எல்லையை கடந்து போய்கொண்டு இருக்கிறது, குறிப்பாக பெங்களூரில் இருக்கும் வீட்டு ஓனர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வாடகைக்கு வீடு பெற வேண்டுமெனில் வேலை செய்யும் இடம் முதல் பேஸ்புக், லின்கிடுஇன் ப்ரொபைல் என பல விபரங்களை கேட்பது மட்டும் அல்லாமல் நாள் கணக்கில் காக்க வைத்து பல சுற்று இண்டர்வியூ வைத்த பின்பு தான் வீடு கிடைக்குமா கிடைக்காதா என கூறுகின்றனர். இதற்கு லேட்டஸ்ட் உதாரணம் ஸ்டார்ட்அப் நிறுவனமான Neeraj Menta-வின் டிவிட்டர் பதிவு.
பெங்களூர் வீட்டு ஓனர்களின் இந்த கடுமையான முறைக்கு என்ன காரணம்..? எதற்காக இந்த அட்டகாசம் நடக்கிறது..? பொதுவாக அதிக வாடகைக்கு தான் வீட்டு ஓனர்கள் ஆசைப்படுவார்கள், ஆனால் இந்த இண்டர்வியூ, தகவல் சேகரிப்பை பார்த்தால் அப்படி தெரியவில்லை.. ஏன் இந்த நிலை..? பெங்களூர் முழுவதும் இந்த பிரச்சனை இருக்கிறதா..?
பெங்களூர் – இந்தியாவின் மாபெரும் டெக் நகரம், இந்தியா முழுவதிலும் இருந்து மக்கள் பெங்களுருக்கு வருவதை தாண்டி தற்போது வெளிநாட்டவர்களும் இந்தியாவில் தொடங்கும் திட்டத்துடன் பெங்களூர்-க்கு வருகின்றனர். இதனால் பெங்களூரின் முக்கிய பகுதிகள், மையப் பகுதிகளில் இருக்கும் வீடுகளுக்கு வீட்டு ஓனர்களின் கெடுபிடி அதிகமாக உள்ளது. Neeraj Menta-வின் டிவிட்டர் பதிவு-க்கு கீழ் பெங்களூரில் வீட்டு ஓனர்களின் கெடுப்பிடி குறித்த விளக்கத்தை கொடுத்துள்ளனர். இதில் coolg3r என்ற டிவிட்டர்வாசி, எங்களுடைய குடும்ப நண்பர் சில வருடங்களுக்கு முன்பு சரியாக Background-ஐ செக் செய்யாமல் வாடகைக்கு வீட்டை கொடுத்தார். அன்று முதல் இன்று வரையில் வாடகைக்கு வந்தவர் வாடகை கொடுக்காமலும், வீட்டை காலி செய்யாமலும் உள்ளார்.