பெட்ரோல் நிலையங்களில் ரூ.2000 நோட்டு செல்லும் – இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

பெட்ரோல் நிலையங்களில் ரூ.2000 நோட்டு செல்லும் என இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது.

செப்டம்பர் 30ம் தேதியுடன் ரூ.2000 நோட்டுகள் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. இந்நிலையில் ரூ.2000 நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

அதனால், பல்வேறு வணிக வளாகங்கள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் ரூ.2000 நோட்டுகளை வாங்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுகுறித்து இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பு ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டிருக்கிறது. “வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்புவதற்காக ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொடுத்தால் பெட்ரோல் நிலையங்கள் வாங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

எனவே, ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொண்டு வரும் வாகன ஓட்டிகளை திருப்பி அனுப்பக் கூடாது. அந்த வாகன ஓட்டிகளிடம் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் பெட்ரோல், டீசலை போடுமாறு அறிவுறுத்த வேண்டும்.

இதன்மூலம் சில்லறை பிரச்சினையைத் தீர்க்கலாம். அத்துடன், ரூ.10 ஆயிரத்துக்கு எரிபொருள் நிரப்ப ரூ.2 ஆயிரம் நோட்டுகளை செலுத்தும் வாடிக்கையாளர்களின் கேஒய்சி விவரங்களைப் பெற வேண்டும். மேலும், டீலர்கள் தங்களது தினசரி விற்பனையை விட கூடுதல் பணத்தை வங்கிகளில் தினசரி செலுத்த வேண்டாம். குறிப்பாக, ரூ.2 ஆயிரம் நோட்டுகளை செலுத்த வேண்டாம். அவ்வாறு செலுத்தினால் வருமானவரித் துறையின் கண்காணிப்பில் சிக்க நேரிடும்.” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.