போபால் – டெல்லி வந்தே பாரத் ரயில் பெட்டியில் தீ, வைரலாகும் வீடியோ
மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் இருந்து புது டெல்லி நோக்கி பயணப்பட்ட வந்தே பாரத் ரயிலின் ஒரு பெட்டியில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை திடீரென தீப்பிடித்தது. மத்தியப் பிரதேச மாநிலம் ராணி கமலாபட்டி நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டு டெல்லி நிசாமுதீன் ரயில் நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ரயிலின் ஒரு பெட்டியில் தீப்பற்றியது.
ரயிலின் சி-12 பெட்டியில் அதிகாலை 6.45 மணியளவில் தீ பிடிப்பதை பார்த்த சில ரயில்வே ஊழியர்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க ரயில் குர்வாய் மற்றும் கைதோரா ரயில் நிலையங்களுக்கு இடையே நிறுத்தப்பட்டது. அந்தப் பெட்டியில் 20 முதல் 22 பயணிகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக ரயிலில் இருந்து இறங்கினர். அந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
அண்மையில் கோரமண்டல் – ஹவுரா ரயில்கள் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். அந்தச் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி இன்னும் நாட்டு மக்கள் மனங்களில் இருந்து விலாகததால் ரயில் விபத்து சிறியதாக இருந்தாலும்கூட பதற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது.
இன்றைய சம்பவம் குறித்து ரயில்வே துறை வெளியிட்ட அறிக்கையில், “போபால்- டெல்லி இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சி-12 பெட்டியில் இருந்த பேட்டரி பாக்ஸில் இன்று காலை திடீரென தீ பிடித்தது. உடனடியாக தகவல் கிடைத்ததால் ரயில் குர்வாய் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்தனர். பயணிகள் யாருக்கும் சிறு காயம் கூட ஏற்படவில்லை. தீ பிடித்தது தெரிந்து ரயில் நிறுத்தப்பட்ட உடனேயே அந்தப் பெட்டியில் இருந்தவர்கள் கீழே இறங்கிவிட்டனர். சீரமைப்புப் பணிகள் நடைபெறுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ரயிலில் தீ பிடித்த காட்சியும் அதிலிருந்து பயணிகள் வேகமாக இறங்கும் காட்சியும் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி மத்தியப் பிரதேசம் – டெல்லி வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி வைத்தார். இந்த ரயில் 701 கிலோ மீட்டர் தூரத்தை 7 மணி நேரம் 30 நிமிடங்களில் கடக்கிறது. சனிக்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் இயங்குகிறது.