மணிப்பூர் சென்றது ‘இந்தியா’எம்.பி.க்கள் குழு!

 எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘இந்தியா’ சார்பில் 20 எம்.பி.க்கள் அடங்கிய குழு இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் புறப்பட்டுச் சென்றது.

மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும், நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போராடி வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி இதுவரை நாடாளுமன்றத்துக்கு வந்து விளக்கம் அளிக்காததால், அவரை விளக்கம் அளிக்க வலியுறுத்தும் விதமாக மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. நோட்டீசை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவையில் எப்போது எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசித்து அறிவிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மணிப்பூர் மக்களைச் சந்திக்கும் நோக்கில் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் இன்று காலை புறப்பட்டுச் சென்றனர். இந்தக் குழுவில் திமுக எம்.பி. கனிமொழி, விசிகவின் தொல் திருமாவளவன் காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகோய், பூலோ தேவி நீத்தம், கே.சுரேஷ், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சுஷ்மிதா தேவ், ஆம் ஆத்மியின் சுஷில் குப்தா, சிவ சேனாவின் அரவிந்த் சாவந்த், ஐக்கிய ஜனதா தள கட்சியின் ராஜீவ் ரஞ்சன் சிங், அனீல் பிரசாத் ஹெக்டே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சந்தோஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏஏ ரஹிம், ஆர்ஜேடியின் ஜாவேத் அலி கான், சமாஜ்வாடி கட்சியின் மஹுவா மாஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிபி முகமது ஃபைசல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடி முகமது பஷீர், விசிக ரவிக்குமார், ஆர்எஸ்பி என்கே பிரேமசந்திரன், உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

மணிப்பூரின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் மைத்தேயி இனத்தையும், 40 சதவீதம் பேர் மலைகளில் வசிக்கும் நாகா மற்றும் குகி பழங்குடியினத்தையும் சேர்ந்தவர்கள். பள்ளத்தாக்கு பகுதிகளில் வசிக்கும் மைத்தேயி இனத்தவர்கள் தங்களுக்கும் பழங்குடியின அந்தஸ்து கோரியதில் அவர்களுக்கும் நாகா உள்ளிட்ட பழங்குடியினத்தவர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. கடந்த 3 மாதங்களாக மணிப்பூரில் நடைபெற்று வரும் இதுதொடர்பான வன்முறை சம்பவங்களில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பதுடன் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

இதனிடையே குகி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை ஆடையின்றி ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பல்வேறு நகரங்களில் இந்த சம்பவத்தை கண்டித்து மகளிர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.