மணிப்பூர் பற்றி எரிவதை ஐரோப்பிய யூனியன் விவாதிக்கிறது- பிரதமர் மோடி மீது ராகுல் தாக்கு.

 மணிப்பூர் விவாகரம் பற்றி ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி புதிய விமர்சனத் தாக்குதல் தொடுத்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், “மணிப்பூர் பற்றி எரிகிறது. ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் பற்றி விவாதிக்கப்படுகிறது. இதுவரை பிரதமர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதற்கிடையில், ரஃபேல் அவருக்கு பிரான்ஸ் தேசிய தினத்தில் பங்கேற்க டிக்கெட் பெற்றுத் தந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் பிரான்ஸ் பயணம்: முன்னதாக, பிரதமர் மோடி பிரான்ஸ் அதிபரின் அழைப்பை ஏற்று வியாழக்கிழமை அந்நாட்டிற்குச் சென்றார். அங்கு பிரதமர் மோடிக்கு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன், தங்கள் நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர் விருதை வழங்கி கவுரவித்தார். வெள்ளிக்கிழமை அந்நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டர் பதிவொன்றில், “இந்த பிரான்ஸ் பயணம் மறக்க முடியாத ஒன்று. பிரான்ஸின் தேசிய தினத்தில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது இந்த பயணத்தை இன்னும் சிறப்பாக்கியது. அங்கு நடந்த அணிவகுப்பில் இந்திய அணி பங்கேற்று பெருமை சேர்த்தது சிறப்பாக இருந்தது. சிறப்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனுக்கும், பிரெஞ்சு மக்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா – பிரான்ஸ் உறவு தொடரும்” என்று தெரிவித்திருந்தார்.

பிரதமரின் இந்தப் பயணத்தின்போது இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலுக்காக 26 ரஃபேல்-எம் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

 பிரதமரின் இந்த வருகைக்கு முன்பாக, ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்த இந்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த இந்திய அரசு, மணிப்பூர் குறித்து ஐரோப்பிய யூனியன் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது அதன் காலனியாதிக்க மனநிலையைக் காட்டுகிறது என்று கூறியிருந்தது.

 இந்த நிலையில், ராகுல் காந்தியின் ட்வீட்டுக்கு, “ராகுல் காந்தியின் லண்டன் பயணத்துக்குப் பிறகு, மணிப்பூர் விவகாரத்தை ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் கையிலெடுத்திருப்பது தற்செயலானது இல்லை” என்று பாஜக பதிலடி தந்துள்ளது.

பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் அமித் மாளவியா, “லண்டன் சென்ற ராகுல் காந்தி இந்தியாவின் உள்நாட்டு விவாகாரங்களில் ஐரோப்பா தலையிட வேண்டும் என்று கோருகிறார். பின்னர் மணிப்பூரின் துரதிர்ஷ்டவசமான வன்முறையை அரசியலாக்குதிறார். இந்த காங்கிரஸ் பாரம்பரியம் மணிப்பூருக்குச் செல்கிறது, அடுத்து ஒரு வெளிநாட்டு சக்தி இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தீர்ப்பளிக்க விரும்புகிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ஐரோப்பிய யூனியனில் பாரிஸின் சமீபத்திய கலவரம் பற்றி எந்த விவாதமும் நடத்தப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு ஜூன் 29-ம் தேதி ராகுல் காந்தி நேரில் சென்றிருந்தார். தனது பயணம் குறித்த ட்விட்டர் பதிவில், “மணிப்பூரின் நிலைமை சரியாக அமைதி தேவை. எனது இரண்டு நாள் பயணத்தில் துயரத்தில் இருக்கும் நம் சகோதர சகோதரிகளின் நிலை என் இதயத்தை நொறுக்கியது. அமைதி ஒன்றே முன்னேறுவதற்கான ஒரே வழி. நாம் அனைவரும் அதை நோக்கி பணியாற்ற வேண்டும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.