மணிப்பூர் வீடியோ வழக்கை சிபிஐ விசாரிக்க பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்ப்பு!

மணிப்பூர் சம்பவம் தொடர்பான வீடியோவில் இரண்டு பெண்கள் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது, பெண்களுக்கு எதிராக அக்கலவரம் தொடர்பாக நடந்த ‘தனிப்பட்ட சம்பவம் இல்லை’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இனக்கலவரத்தின்போது பழங்குடியினப் பெண்கள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களின் அடையாளம் வெளியிடப்படக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் திங்கள்கிழமை விசாரணை செய்தார். அப்போது அவர், “மே 4-ம் தேதி நடந்த இந்தச் சம்பவம், ஒரு தனிப்பட்ட சம்பவம் இல்லை என்பது உள்துறைச் செயலாளர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இருந்து தெரிகிறது.

பாதிக்கப்பட்ட இந்த இரண்டு பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் எந்த அளவுக்கு விருப்புகிறதோ அதே அளவுக்கு இதுபோல பாதிக்கப்படும் பிற பெண்களுக்கும் நீதி கிடைக்கும் வகையில் ஒரு வழிமுறையை (mechanism) உருவாக்க வேண்டும். குற்றம் தொடர்பாக வழக்கு போடுதல், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தலைஉறுதி செய்யும் ஒரு செயல்முறையை உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

விசாரணையின்போது பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், மணிப்பூர் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். மேலும், மே 4 சம்பவத்தை விசாரிக்க சுதந்திரமான ஓர் அமைப்பை உச்ச நீதிமன்றம் உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல, இந்த வழக்கினை அசாமுக்கு மாற்ற வேண்டும் என்ற அரசின் கோரிக்கைக்கு பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பு எதிர்ப்புத் தெரிவித்தது.

இதனிடையே, அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வழக்கு விசாரணையை அசாமுக்கு மாற்ற வேண்டும் என்று அரசு கூறவில்லை என்றும், வழக்கு விசாரணை எங்கு நடந்தால் சரியாக இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் கருதும் இடத்துக்கு வழக்கு விசாரணையை மாற்ற அரசு தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றம் கேள்வி: விசாரணையின்போது மணிப்பூரில் ஏற்பட்டுள்ள இனக் கலவரத்தில் பெண்களுக்கு எதிராக மே 4-ம் தேதி முதல் இதுவரை எத்தனை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு மத்திய, மாநில அரசுகள் மவுனம் காத்தன.

‘மிகவும் கொடூரமானது ’- மத்திய அரசு பிரமாண பத்திரம்: வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை செயலகம் தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில், ‘கடந்த மே 4-ம் தேதி தெளபால் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறை மிகவும் கொடூரமானது. நாடு முழுவதும் இதுபோன்ற குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 7 பேர் (தாக்கல் செய்யப்பட்டபோது) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும். அதேபோல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து 6 மாத காலத்துக்குள்ள விசாரணையை முடிக்க உத்தரவிட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது.

மேலும் தனது ஏழு பக்க பிரமாணப் பத்திரத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறையை மத்திய அரசு பொறுத்துக் கொள்ளாது என்றும், பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவரை நேரிலோ அல்லது தொலைப்பேசி வழியாகவோ அரசால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், மாநில அரசு பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை வகுத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தது. அதேபோல், இந்த வன்முறை குற்றம் தொடர்பாக தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறித்துள்ளது.

தாமாக முன்வந்து வழக்கு: முன்னதாக, ஜூலை 19-ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக, மணிப்பூர் கலவரத்தின் போது மே 4-ம் தேதி மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் கும்பல் ஒன்றால் குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்ட வீடியோ ஒன்று பரவி நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுதொடர்பாக, ஜூலை 20-ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மணிப்பூர் வீடியோ தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியதுடன், இந்தச் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறியது.

இந்தச் சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி, “அந்த வீடியோவால் நாங்கள் மிகவும் தொந்தரவுக்குள்ளாகி உள்ளோம். இந்தச் சம்பவம் மிகவும் கவலையளிக்கும் ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம்; நடவடிக்கை எடுங்கள். விரோதத்தை தீர்த்துக்கொள்ள பெண்களை வன்முறையின் கருவியாக பயன்படுத்தப்படுவது அரசியலமைப்பு ஜனநாயகத்தால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத மனித உரிமை மீறல். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாங்கள் எடுப்போம். இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப் பதிந்து அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்துவது அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று தெரிவித்திருந்தார்.