வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நேற்று அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வீடு திரும்பினார்.
வெளிநாடு அரசுமுறைப் பயணம், தமிழ்நாட்டில் ஆய்வு மேற்கொள்வது, சொந்த தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது என தொடர்ந்து சுற்றுப்பயணத்திலேயே இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உடல் சோர்வு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அவரது வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நேற்று கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். அவரை பரிசோதித்த பின்னர் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்து நாளை அவர் வீட்டுக்கு செல்வார்.” என நேற்று அறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று காலை மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு வீடு திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கமான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.