மருந்து, மாத்திரை இல்லாமல் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க சிம்பிளான டிப்ஸ்..!

கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக உடற்பருமன், புகைபிடித்தல், உடலுக்கு போதுமான அளவு செயல்பாடு கொடுக்காமல் இருத்தல், குறைந்த நார்ச்சத்து கொண்ட உணவை சாப்பிடுதல் மற்றும் ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுதல் போன்றவை அடங்கும்.

இன்றைய காலகட்டத்தில் முற்றிலும் மாறிப்போன வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் காரணமாக ஏராளமான நோய்கள் உருவெடுக்க ஆரம்பித்துள்ளது. அவற்றில் ஒன்று அதிக கொலஸ்ட்ரால். கொலஸ்ட்ரால் நம் உடலுக்கு அவசியமானது என்றாலும் கூட அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ரால் இருப்பது இதய நோய்கள் உட்பட பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ரத்த நாளங்களில் அதிகப்படியான கொழுப்பு படியும் பொழுது ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுகிறது.

இதனால் ஹார்ட் அட்டாக், பக்கவாதம் மற்றும் தமனி நோய்கள் ஏற்படுகிறது. கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக உடற்பருமன், புகைபிடித்தல், உடலுக்கு போதுமான அளவு செயல்பாடு கொடுக்காமல் இருத்தல், குறைந்த நார்ச்சத்து கொண்ட உணவை சாப்பிடுதல் மற்றும் ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுதல் போன்றவை அடங்கும். ஒருவர் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஒருவேளை உங்களது கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்படுத்துவதற்கு இயற்கையான வழிகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால் உங்களுக்கு உதவக்கூடிய சில டிப்ஸ் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

தினமும் உடற்பயிற்சி செய்யவும்: வழக்கமான முறையில் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவுகளை பராமரிப்பதற்கு உதவும் உடற்பயிற்சி செய்வது ஹை டென்சிட்டி லிப்போ புரோட்டீன் (HDL) அல்லது நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவுகிறது. வாரத்திற்கு 5 நாள் வீதம் ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நன்மை தரும். ஜாகிங், பளு தூக்குதல், யோகா மற்றும் ரன்னிங் போன்ற உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற உடற்பயிற்சியை நீங்கள் தேர்வு செய்யலாம்.

புகை பிடிப்பதை கைவிடுதல்: புகை பிடிப்பதால் கெட்ட கொலஸ்ட்ரால் அல்லது LDL அதிகரிக்கும் என்பது ஆய்வு மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக புகை பிடிப்பதை கைவிடுவது ஒருவருக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. புகைப்பிடிப்பதை கைவிடுவதில் உங்களுக்கு சிக்கல் இருந்தால் மருத்துவரின் உதவியை நாடுங்கள்.

உடல் எடையை குறைத்தல் : உடற்பருமன் நல்லது உடல் எடை அதிகமாக இருப்பதன் காரணமாக கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகரிக்கலாம். எனவே, உடல் எடையை குறைப்பதால் கொலஸ்ட்ரால் அளவுகள் குறையும் என்று ஆய்வுகள் கூறுகிறது. உடல் எடையை குறைப்பது நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.

போதுமான அளவு தூக்கம் : தினமும் போதுமான அளவு தூக்கத்தை பெறுவது ஏராளமான நன்மைகளை நமக்குத் தரும். ஒரு சராசரி மனிதர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 7 மணி நேரம் தூங்குவது அவசியம். தூக்கத்தின் அளவு மற்றும் தரம் ஆகிய இரண்டுமே கொலஸ்ட்ரால் அளவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் தூக்கத்தை எதற்காகவும் சமரசம் செய்யாதீர்கள்.

ஆரோக்கியமான உணவு: கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் குறைவாக இருக்கக்கூடிய சமச்சீரான உணவு சாப்பிடுவது அவசியம். உங்கள் உணவில் அதிக அளவில் முழு தானியங்கள், லீன் புரோட்டின், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். அவகாடோ, பாதாம் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட, பிராசஸ் செய்யப்பட்ட மற்றும் கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

குறிப்பு: தொடர்ச்சியான மன அழுத்தம் கூட கொலஸ்ட்ரால் அளவுகளை பாதிக்கலாம். எனவே யோகா, ஆழ்ந்த மூச்சு பயிற்சி அல்லது தியானம் போன்ற ஓய்வு நுட்பங்கள் மூலமாக உங்கள் மன அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்யுங்கள்.

ஒரு சில நேரங்களில் வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான ஒரு சில மாற்றங்களை செய்வது மட்டுமே உங்கள் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைப்பதற்கு போதுமானதாக இருக்காது. எனவே உங்கள் மருத்துவரை அணுகி கூடுதலாக நீங்கள் ஒரு சில மருந்துகளை எடுக்க வேண்டி இருக்கலாம் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.