மல்யுத்த வீரர்கள் போராட்டம் – உலக மல்யுத்த அமைப்பு கண்டனம்

போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்துவோம் என்று உலக மல்யுத்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக மந்திரியுமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழாவின் போது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணியாக நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்றனர்.

இதனிடையே, பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாஜக மந்திரியும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ்பூஷண் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து தேசிய சர்வதேச போட்டிகளில் நாட்டிற்காக வென்ற பதங்களை கங்கை நதியில் வீசப்போவதாக மல்யுத்த வீரர் வீராங்கனைகள் நேற்று அறிவித்தனர். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக மந்திரியுமான பிரிஜ்பூஷண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மல்யுத்த வீரர்கள் 5 நாட்கள் கெடு விதித்துள்ளனர்.

இந்த நிலையில், நீதி கேட்டு போராட்டம் நடத்திய இந்திய மல்யுத்த வீரர்களை கைது செய்ததற்கு உலக மல்யுத்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. பிரிஜ் பூஷனுக்கு எதிரான விசாரணையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது எமாற்றம் அளிக்கிறது என்றும், பிரிஜ்பூஷனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும் என உலக மல்யுத்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது. மேலும் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்துவோம் என்று உலக மல்யுத்த அமைப்பு தெரிவித்துள்ளது.