மாயாற்றில் வெள்ளப்பெருக்கு: தெங்குமரஹாடாவுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தெங்குமரஹாடா உள்ளிட்ட மலைக் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

கேரள மாநிலம் மற்றும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், அங்குள்ள நீர்மின் உற்பத்தி அணைகள் நிரம்பியுள்ளன. இதன் காரணமாக பில்லூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து நேற்று நிரம்பியது. அணைக்கு வரும் நீர் முழுவதும், உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதையடுத்து பில்லூர் அணை முதல் பவானிசாகர் அணை வரை, பவானி ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பில்லூர் அணையில் இருந்து விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுவதால், கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழையால், மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மாயாற்றின் மறுகரையில் உள்ள தெங்கு மரஹாடா, கள்ளட்டி, ஊதிக்குப்பம் போன்ற பகுதி மக்களுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. மாயாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் தெங்குமரஹாடா கிராமம் துண்டிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.

மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அபாயகரமான முறையில் வாகனம் அல்லது பரிசல் மூலம் ஆற்றைக் கடக்க வேண்டாம் என கிராம மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், தெங்குமரஹாடாவில் இருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்வோர் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

பவானி சாகர் நீர்மட்டம் உயர்வு: பில்லூர் அணை நிரம்பி, உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. மாயாற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பவானி சாகருக்கான நீர் வரத்து அதிகரித்து ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் (24-ம் தேதி) மாலை 79.91 அடியாக இருந்த நிலையில், நேற்று மாலை 80.95 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 16.19 டிஎம்சியாக உள்ளது.

அணைக்கு விநாடிக்கு 6,244 கன அடி நீர்வரத்து இருந்த நிலையில், அணையில் இருந்து தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசனத்துக்கு விநாடிக்கு 800 கன அடியும், காலிங்கராயன் பாசனத்துக்கு 100 கன அடியும், குடிநீர் தேவைக்கு பவானி ஆற்றில் 200 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடியும் நீர் திறக்கப்படுகிறது.