‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ ரிலீஸ் தள்ளிவைப்பு!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா நடிப்பில் வெளியாகவிருந்த ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் அனுஷ்கா. 2020-ஆம் ஆண்டு வெளியான ‘நிசப்தம்’ படத்துக்குப் பிறகு எந்தப் படத்திலும் அனுஷ்கா நடிக்கவில்லை. உடல் பருமன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததாக சொல்லப்பட்டது.

இந்தச் சூழலில் தற்போது அனுஷ்கா ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அனுஷ்காவுக்கு ஜோடியாக நவீன் பொலிஷெட்டி நடித்துள்ளார். இவர் ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாஸ்’ படத்தின் மூலம் பிரபலமானவர். மகேஷ் பாபு.பி இயக்கியுள்ள இப்படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது.

இப்படம் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் புதிய ரிலீஸ் தேதியும் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.