மீண்டும் துருக்கியின் அதிபரானார் எர்டோகன் – இரண்டாவது முறையாக நடந்தப்பட்ட தேர்தலில் கிடைத்த வெற்றி!

முதல்முறை நடந்த துருக்கி அதிபர் தேர்தலில் எந்தக் கட்சியும் 50% வாக்குகளை பெறவில்லை என்பதால், இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட தேர்தலில் 52% வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார் எர்டோகன்.

முதல்முறை நடந்த துருக்கி அதிபர் தேர்தலில் எந்தக் கட்சியும் 50% வாக்குகளை பெறவில்லை என்பதால், இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட தேர்தலில் 52% வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார் எர்டோகன்.

2003ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை துருக்கியில் பிரதமர் என்ற அதிகாரம் மட்டுமே இருந்தது. அந்த ஆண்டுகளில் எர்டோகன் பிரதமராக ஆட்சி செய்து வந்தார். இந்நிலையில் 2014ம் ஆண்டில் அதனை அதிபர் என்ற உட்சபட்ச அதிகாரம் கொண்ட பதவியாக மாற்றினார் எர்டோகன். அதற்கு அடுத்த அடுத்த தேர்தல்களிலும் தொடர்ச்சியாக அவரே அதிபராக பதிவி வகித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி – சிரியா ஆகிய இருநாட்டு எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர பூகம்பங்களால் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். பூகம்பத்தில் இருந்து மக்களை மீட்க அதிபர் எர்டோகன் விரைவாகச் செயல்படவில்லை. அதனால் தான் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தார்கள் என விமர்சனங்கள் எழுந்தன. மேலும், பொருளாதார சிக்கலும் நாட்டில் நிலவி வந்தது.

இதன் காரணமாக மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட எர்டோகனுக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்று திரண்டு துருக்கியின் காந்தி என்று அழைக்கப்படும் குடியரசு மக்கள் கட்சியை சேர்ந்த கெமல் கிளிக்டரோக்லுவை எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக நிறுத்தினார்கள்.

பெரும் பதற்றத்துக்கிடையே கடந்த 15 ஆம் தேதி துருக்கி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் எர்டோகன் 49.6% வாக்குகளும், கெமல் கிலிக்டரோக்லு 44.7% வாக்குகளும், தேசியவாத வேட்பாளர் சின ஒகன் 5.2% வாக்குகளும் பெற்றனர்.

துருக்கியின் வழக்கப்படி தேர்தலில் 50% வாக்குகளை பெற்றால்தான், அது பெரும்பான்மை. அந்த வகையில் 0.4% வாக்குகள் குறைவாக பெற்றதால், பெரும்பான்மையை எர்டோகன் தவறவிட்டார். இதனைத் தொடர்ந்து அடுத்தச் சுற்று தேர்தல் துருக்கியில் நேற்று நடைபெற்றது.

இந்நிலையில் 99% வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட சூழலில் எர்டோகன் 52% வாக்குகளும் அவரை எதிர்த்திப் போட்டியிட்ட கெமால் 48 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால் எர்டோகன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.