மார்வெல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘லோகி’ வெப் தொடரின் இரண்டாவது சீசனின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தில் காலப் பயணம் செய்யும் லோகி, மரணத்திலிருந்து தப்பிப்பது போல ‘லோகி’ தொடரின் முதல் சீசனில் காட்டப்பட்டிருந்தது. இதில் லோகியின் பல்வேறு வெர்ஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தானோஸுக்குப் பிறகு மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப் பெரிய வில்லனான ‘காங்’ இந்த சீசனின் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டார். இதனால், இத்தொடரின் 2வது சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தச் சூழலில் ‘லோகி’ 2வது சீசனின் ட்ரெய்லரை மார்வெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – முதல் சீசனின் இறுதியில் வேறொரு யுனிவர்ஸுக்குள் நுழைந்து விடும் லோகியை அங்குள்ள யாருக்குமே அடையாளம் தெரியவில்லை. இதனிடையே ’டைம்- ஸ்லிப்பிங்’ எனப்படும் ஒரு புதிய பிரச்சினையை எதிர்கொள்கிறார் லோகி. அதாவது எதிர்பாராத நேரத்தில் கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் மாறி மாறி இழுத்தடிக்கப்படுகிறார். இந்தச் சிக்கலை சரிசெய்ய லோகி, மோபியஸ் இருவரும் காலப்பயணம் செய்து பல்வேறு டைம்லைன்களுக்கு செல்வதாக ட்ரெய்லர் செல்கிறது.
சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது வென்ற கே ஹூய் குவான் (Ke Huy Quan) சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பது சர்ப்ரைஸ். பழைய கேரக்டர்களுடன் சில புதிய கேரக்டர்களும் இதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ‘லோகி’ 2வது சீசன் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. ‘லோகி’ சீசன் 2 ட்ரெய்லர் வீடியோ: