”முதலில் நாம் எடுக்கும் முடிவுகளை நாமே மதிக்க வேண்டும்” – Vitiligo Ramya-வின் சாதனைப் பயணம்!

மெலனின் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட Vitiligo Ramya Christina, தன் தடைகளையும் கஷ்டங்களையும் கடந்து மாடலாக, சமூக செயற்பாட்டாளராக, Motivational பேச்சாளராக தன்னை மெருகேற்றிக்கொண்டு சாதனை படைத்திருக்கிறார்.

உடல் முழுவதும் தீயில் சிக்கி அதில் இருந்து மீண்டு வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது Vitiligo என்ற குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் தோல். அவர்களை தோல் நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு தீண்டத்தகாதவர்களைப் போலவே நடத்துவது இந்தச் சமூகத்தில் இயல்பான ஒரு விஷயமாக இருக்கிறது. ஆனால், அந்தக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் தான் அந்த வலி தெரியும்.

அப்படி சிறுவயதில் இருந்தே மெலனின் சத்து குறைபாடு ஏற்பட்டு Vitiligo பிரச்னையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் ரம்யா கிறிஸ்டினா. படிக்கப் போன பள்ளியில் அவர் பக்கத்தில் உட்கார கூட சக வகுப்புத் தோழிகள் அச்சப்பட்டுள்ளனர். ஏன் ஆசிரியர்களே கூட அவரைப் பாகுபாட்டுடன் தான் பார்த்ததாக தன்னுடைய சிறுவயது கசப்பான அனுபவத்தைச் சொல்கிறார் ரம்யா.

எப்படியாவது இந்த குறைபாட்டில் இருந்து மீண்டு மற்றவர்களைப் போல எந்த உருத்தலும் இல்லாமல் வாழ வேண்டும் என நினைத்திருக்கிறார். அதற்காக எத்தனையோ சிகிச்சைகள் எடுத்திருக்கிறார். ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை. கடைசியாக UV சிகிச்சை எடுத்திருக்கிறார். அதன் பிறகு அவரது உடல் பலவீனமாகியிருக்கிறது. பொது மருத்துவரைப் போய் பார்த்தபோதான், UV சிகிச்சை எடுத்ததில் அவருக்கு நோய் எதிப்பு சக்தி குறைந்து ஹீமோகுளோபின் அளவு குறைந்துபோயிருப்பது தெரிந்திருக்கிறது.

அந்தச் சிகிச்சையினால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தவர், அறையில் அமர்ந்து யோசித்து இருக்கிறார். “இனி விட்டிலிகோ குறைபாட்டிற்கு எந்த சிகிச்சையும் எடுக்கப்போவது இல்லை. என்னுடைய உடலைப் பற்றிய அவமானம் எனக்கே இருக்கும்போது மற்றவர்களும் அப்படிதானே பார்ப்பார்கள். அதனால், இனி இந்தக் குறைபாட்டை எண்ணி கஷ்டப்படப்போவது இல்லை” என முடிவு எடுத்திருக்கிறார்.

அப்போதுதான் அவருக்கான கல்லூரி வாழ்க்கை தொடங்கி இருக்கிறது. கல்லூரிக்கு செல்ல தினமும் தன்னை அழகுபடுத்திக்கொண்டு மாடர்னாக மாற்றிக்கொண்டார். அதுவே அவருக்கு நிறைய நண்பர்களைப் பெற்றுக்கொடுத்தது.

தனக்கு கிடைத்த தன்னம்பிக்கையையும் விட்டிலிகோ குறைபாடு குறித்து பேஸ்புக்கில் எழுதி இருக்கிறார் ரம்யா. அது ஆயிரக்கணக்கானவர்களைப் போய் சேர்ந்தது. அதனைப் பார்த்த ஒருவர், தன்னுடைய பிராண்டுக்கு ரம்யாவை மாடலிங் செய்துகொடுக்கும்படி கேட்டிருக்கிறார். அப்போதுதான் அவருடைய மாடலிங் வாழ்க்கை தொடங்கி இருக்கிறது. வெளிநாட்டைச் சேர்ந்த Winnie Harlow என்ற விட்டிலிகோ குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட நபர் தன்னை தானே அழகாகவும் பாசிட்டிவான ஒரு மனிதராகவும் மாற்றிக்கொண்டுள்ளார். அவரைப் பார்த்து தன்னுடைய ரோல்மாடலாக எடுத்துக்கொண்டுள்ளார் ரம்யா.

விட்டிலிகோ பிரச்னையினால் பாதிக்கப்பட்ட யாரும் தான் பட்ட கஷ்டங்களையும் நிராகரிப்புகளை சந்திக்க கூடாது என்பதற்காக அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். Maayaaveez என்ற அந்த என்.ஜி.ஓ மூலமாக விட்டிலிகோ பிரச்னை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அதுமட்டுமல்லாது பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார்.

தன்னுடைய குறைபாட்டை பாசிட்டிவாக மாற்றிக்கொண்டு…. ஒரு மாடலாகவும்…ஃபில்ம் மேக்கராகவும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூக செயற்பாட்டாளராகவும் வலம் வருகிறார் ரம்யா கிறிஸ்டினா.