முதல்வர் பதவி கேட்டு மிரட்ட மாட்டேன், முதுகில் குத்த மாட்டேன் – டி.கே.சிவக்குமார் பரபரப்பு பேட்டி

கர்நாடக தேர்தல் வெற்றிக்குப் பிறகு கட்சி தலைமையை சந்திக்க டெல்லி புறப்பட்ட கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், பெங்களூரு விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 224 தொகுதிகளில் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று அருதிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க இருக்கிறது. இந்நிலையில் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்கிற பரபரப்பு விவாதம் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே முதல்வராக இருந்த சித்தராமையாவை மீண்டு முதல்வராக அறிவிக்க வேண்டும் என ஒரு தரப்பும், தேர்தல் வெற்றிக்காக உழைத்த காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என லிங்காயத் மடாதிபதிகள் உள்ளிட்ட 20 மடாதிபதிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று கட்சி தலைமையை சந்திக்க சித்தராமையா டெல்லி சென்றிருக்கும் நிலையில், இன்று காலை கட்சி தலைமையின் அழைப்பை ஏற்று டெல்லிக்கு புறப்பட்டிருக்கிறார் டி.கே.சிவக்குமார். அப்போது பெங்களூரு விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “முதல்வர் பதவியை கேட்டு யாரையும் மிரட்ட மாட்டேன். யாரையும் பிரிக்க விரும்பவில்லை. முதுகில் குத்த மாட்டேன். வரலாற்றில் தவறான இடத்தை பிடிக்க விரும்பவில்லை. எங்களது அடுத்த சவால் மக்களவை தேர்தலில் 20 தொகுதியில் வெற்றி பெறுவதுதான். கர்நாடக முதலமைச்சர் யார் என்கிற பேச்சுவார்த்தை தொடர்பாக நான் டெல்லி செல்கிறேன். கட்சி தலைமை என்னை மட்டும் வரச்சொன்னதால் நான் மட்டும் தனியாக செல்கிறேன்” என கூறினார்.