மெட்ரோ இரயிலில் பயணம் செய்யும் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்த இனி பயண அட்டையை பயன்படுத்தி கட்டணம் செலுத்த வேண்டுமென மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் மெட்ரோ இரயில் நிறுவனம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இனி மெட்ரோ இரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் வாகனங்களை மெட்ரோ இரயில் பார்க்கிங்கில் நிறுத்தும்போது பணம் கொடுத்து கட்டணத்தை செலுத்த இயலாது. பயண அட்டையின் மூலமாகவே பார்க்கிங் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
இதன் மூலம் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிப்பதோடு, விரைவான சேவையை வழங்க இயலும். இந்த பயண அட்டையை அனைத்து மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் வாகன நிறுத்தும் இடங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். பயண அட்டையை மெட்ரோ இரயில் நிலைய கவுண்டர்களிலோ அல்லது மெட்ரோ இரயில் இணையதளத்தின் மூலமாகவோ ரீசார்ஜ் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயண அட்டையை ஸ்கேன் செய்து உள்ளே வரும் வாகனங்கள் மற்றும் வெளியே செல்லும் வாகனங்களில் நேரத்தை கண்காணித்து அதன் மூலம் கட்டணம் வசூலிக்கப்படும். வாகனத்தின் பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை ஒருமுறை பயண அட்டையில் பதிவு செய்துவிட்டால், தினமும் வாகனத்தை பார்க்கிங் செய்யும்போது ஒவ்வொருமுறையும் வாகன பதிவு எண்ணை கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதன் மூலம் எளிமையான விரைவான சேவையை வழங்க முடியும் எனவும் மெட்ரோல் இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயண அட்டையை பயன்படுத்தும் பயணிகளுக்கு 20% தள்ளுபடி அளிக்கப்படும் எனவும் மெட்ரோ இரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.