ரகசிய ஆவணங்களை திருடியதாக டொனால்டு ட்ரம்ப் மீது 7 வழக்குகள் பதிவு

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது அந்நாட்டு நீதித்துறை 7 வழக்குகளை பதிவு செய்திருக்கிறது.

2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக இருந்தார் டொனால்டு ட்ரம்ப். அப்போது 2020ல் ஜோ பைடன் வெற்றி பெற்ற பிறகு வெள்ளை மாளிகையை விட்டு டொனால்டு ட்ரம்ப் வெளியேறியபோது, ‘classified Documents’ என்ற ஆவணங்களை எடுத்துச்சென்றதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் அதிபர் பதிவிக்கு போட்டியிட இருக்கிறார். இந்தச் சூழலில், டொனால்டு ட்ரம்ப் மீது, அரசு ஆவணங்களை எடுத்துச் சென்றது, சதித்திட்டம் தீட்டியது, நீதித்துறை செயல்பாட்டை முடக்கியது உள்ளிட்ட 7 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாலியல் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் இப்போது இரண்டாவதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் டொனால்டு ட்ரம்ப் தேர்தலில் போட்டியிடுவதற்கு சிக்கலை ஏற்படுத்தும் எனவும் சொல்லப்படுகிறது.