ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றம் உத்தரவு!

சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய நீதிபதிக்கு அளிக்கப்பட்ட பதவி உயர்வை நிறுத்திவைக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

மோடி சமூகத்தைப் பற்றி ராகுல்காந்தி அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் சூரத் நீதித்துறை நடுவர் எச்.எச்.வர்மா ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பினால் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்திவைக்க ராகுல்காந்தி மேல்முறையீடு செய்திருக்கும் நிலையில், 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதி எச்.எச்.வர்மா உள்ளிட்ட 68 நீதிபதிகளுக்கு பதிவி உயர்வு அளிக்கப்பட்டது.

68 நீதித்துறை நடுவர்களுக்கு மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்குவதற்காக குஜராத் மாநில உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்தது. எச்.எச்.வர்மாவுக்கு ராஜ்கோட் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தது. இந்த பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், குஜராத் மாநிலத்தில் 68 நீதித்துறை நடுவர்களுக்கு மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்குவதை நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர். மேலும் நீதிபதி ஷா மே 15-ம் தேதி ஓய்வு பெறுவதால், இந்த வழக்கை தலைமை நீதிபதி அமைக்கும் வேறு ஒரு அமர்வில் விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.