ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் நிர்வாக இயக்குநர் நியமனம்!

சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது துணை ஆளுநராக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் நிர்வாக இயக்குநர் நியமிக்க ஒப்புதல் வழங்கிய மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு

ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி, அந்த வங்கிக்கு நான்கு துணை ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்களுடைய பதிவிக்காலம் 3 ஆண்டுகள். அதனை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கவும் செய்யலாம்.

இதில் இருவர் அவ்வங்கியைச் சேர்ந்தவராகவும், ஒருவர் வர்த்தக வங்கிகளைச் சேர்ந்தவராகவும் மற்றொருவர் பொருளாதார நிபுணராகவும் இருக்க வேண்டும்.

இப்போது மைக்கேல் தேவவரத பத்ரா, எம்.ராஜேஷ்வர் ராவ், டி.ரபி சங்கர், மகேஷ் குமார் ஜெயின் ஆகிய 4 பேர் துணை ஆளுநர்களாக உள்ளனர்.

இதில் மகேஷ் குமார் ஜெயினின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதையடுத்து, மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையிலான நியமன குழு, ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக சுவாமிநாதன் ஜானகிராமனை நியமிக்க நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது.

ஜானகிராமன் இப்போது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவர் 3 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார் என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது