ரியான் பராக் 84 பந்துகளில் சதம் விளாசி அசத்தல்!

நடப்பு தியோதர் டிராபி கிரிக்கெட் தொடரில் 84 பந்துகளில் சதம் விளாசியுள்ளார் ரியான் பராக். தனது இன்னிங்ஸில் 11 சிக்ஸர்களை அடித்து அணியை சரிவிலிருந்து அவர் மீட்டார்.

கிழக்கு மண்டல அணிக்காக அவர் இந்தத் தொடரில் விளையாடி வருகிறார். இன்று (வெள்ளிக்கிழமை) புதுச்சேரியில் உள்ள புதுச்சேரி கிரிக்கெட் சங்க மைதானம் 3-ல் வடக்கு மண்டல அணிக்கு எதிராக அவர் இந்த சதத்தை பதிவு செய்துள்ளார். 57 ரன்களுக்கு அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அந்த நிலையில் இருந்து எதிரணி பந்துவீச்சை கவுண்டர் அட்டாக் செய்து அணியின் ரன்களை பராக் உயர்த்தினார். அவருக்கு துணையாக விக்கெட் கீப்பர் குமார் குஷாக்ரா விளையாடினார். அவர் 87 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் இணைந்து 235 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மறுமுனையில் நிலைத்து ஆடிய பராக், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தனது 4-வது சதத்தை பதிவு செய்தார்.

102 பந்துகளில் 131 ரன்கள் எடுத்தார் பராக். 5 பவுண்டரி மற்றும் 11 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். இதன் மூலம் இந்தத் தொடரில் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் கடந்த 2010-ல் யூசுப் பதான், மேற்கு மண்டல அணிக்காக ஒரே இன்னிங்ஸில் 9 சிக்ஸர்களை விளாசியது சாதனையாக இருந்தது.

50 ஓவர்கள் முடிவில் கிழக்கு மண்டல அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை வடக்கு மண்டல அணி விரட்டுகிறது. கடந்த ஐபிஎல் சீசனில் ரியான் பராக் மிகவும் மோசமாக ஆடி இருந்தார். 7 போட்டிகளில் விளையாடி 78 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அது குறித்து விமர்சனம் எழுந்தது. அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.