ரூ.10,000 கோடியை கடந்த விளம்பர வருவாய்- ஐபிஎல் 2023

கடந்த மே 29-ம் தேதி அன்று ஐபிஎல் 2023 சீசன் நிறைவடைந்தது. இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ். இந்நிலையில், ஐபிஎல் 2023 சீசனில் மட்டுமே சுமார் 10,000 கோடி ரூபாய் விளம்பரங்களின் மூலம் வருவாயாக கிடைத்துள்ளது. இதனை அண்மையில் வெளியான ஆய்வறிக்கை ஒன்று உறுதி செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), ஃப்ரான்சைஸ் அணியின் உரிமையாளர்கள் மற்றும் போட்டிகளை ஒளிபரப்பு செய்தவர்கள் நேரடியாக 65 சதவீதம் வருவாய் ஈட்டியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியை ஒளிபரப்பு செய்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாவுக்கு இதில் ரூ.4,700 கோடி கிடைத்துள்ளது. அணிகளுக்கு ரூ.1,450 கோடியும், பிசிசிஐ-க்கு ரூ.430 கோடியும் கிடைத்துள்ளது. இது மட்டுமல்லாது இந்த சீசனையொட்டி ஃபேன்டசி ஸ்போர்ட்ஸ் தளங்களும் சுமார் 2,800 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளன. போட்டி நடைபெற்றபோது சுமார் 61 மில்லியன் பயனர்கள் ஃபேன்டசி ஸ்போர்ட்ஸ் தளங்களை அக்செஸ் செய்துள்ளதாக தெரிகிறது.

கடந்த மார்ச் 31-ம் தேதி தொடங்கிய ஐபிஎல் 2023 சீசன் மே 29-ம் தேதி நிறைவடைந்தது. பத்து அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் 74 போட்டிகள் விளையாடப்பட்டது. உலக அளவில் அதிக வரவேற்பு பெற்றுள்ள விளையாட்டு தொடர்களில் ஒன்றாக ஐபிஎல் இருப்பது குறிப்பிடத்தக்கது.