ரூ.2000 நோட்டுகளை மாற்ற பான் எண் கட்டாயமா? – ரிசர்வ் வங்கி கவர்னர் பேட்டி

கடந்த வாரம் ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நிலையில். அதுகுறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விரிவாக பேசியுள்ளார் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்

புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாகவும், மே 23ம் தேதியில் இருந்து செப்டம்பர் 30ம் தேதிக்குள் அதனை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

அதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த் தாஸ், ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் அறிவிப்பு, நாணய மேலாண்மை நடவடிக்கையின் ஒரு அங்கம்தான்.நம் நாட்டின் நாணய மேலாண்மை நடவடிக்கை மிகவும் வலுவானதாக உள்ளது.

உக்ரைன் போர் உள்ளிட்ட பிரச்னைகளினால் மேலைநாடுகளில் வங்கிகள் திவால் அடைந்துள்ளன. அதுபோன்ற சிக்கல்களையும் மீறி, இந்திய ரூபாய் மதிப்பு வலுவாக உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பின்போது வாபஸ் பெறப்பட்ட நோட்டுகளை ஈடுகட்டவே 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

மொத்த கரன்சி புழக்கத்தில் ரூ.2000 நோட்டுகளின் பங்களிப்பு, வெறும் 10.8 சதவீதம்தான். இந்த நோட்டுகளை வாபஸ் பெறுவதால், பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு மிக மிக குறைவாகவே இருக்கும். அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் தேவைக்கு அதிகமாக கையிருப்பில் உள்ளன. ரிசர்வ் வங்கியிடம் மட்டுமின்றி, வங்கிகளிலும் போதுமான அளவுக்கு பணம் உள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பொதுமக்கள் படும் சிரமங்களை அறிவோம். வங்கிகள் போதிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

தேவைப்பட்டால், ஒழுங்கு விதிமுறைகள் வெளியிடப்படும். வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்தால், வருமானவரி தேவைக்காக ‘பான்’ எண் குறிப்பிட வேண்டும் என்கிற விதிமுறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. அதே விதிமுறை ரூ.2000 நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்யப்படும்போதும் பின்பற்றப்படும். ஆகையால் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யும் நபர்கள் கட்டாயம் பான் எண்ணை செல்லானில் குறிப்பிட வேண்டும்.

வெளிநாடுகளுக்கு நீண்ட கால சுற்றுலா சென்றவர்களும், பணி விசாவில் வெளிநாடு சென்றவர்களும் 2 000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.” என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.