வங்க கடலில் கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் – ஒப்புதல் அளித்த மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம்!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு வங்க கடலில் பேனா நினைவுச் சின்னம் எழுப்புவது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில், இப்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்திருக்கிறது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்தவர் கலைஞர் மு.கருணாநிதி. தமிழ்நாட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவரான அவருக்கு வங்க கடலில் பேனா நினைவுச் சின்னம் எழுப்புவதற்கான திட்டத்தை வகுத்தது திராவிட முன்னேற்றக் கழக அரசு.

கடலுக்குள் நினைவுச் சின்னம் எழுப்புவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தான் பேனா நினைவுச் சின்னம் எழுப்பப்படும் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்திருந்தது.

மேலும், பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு அதற்கான மாதிரி வடிவமைப்பை வெளியிட்டது திமுக அரசு. இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறைக்கு கடந்த 19-ம் தேதி ஒப்புதல் கடிதம் அனுப்பி உள்ளது. அதில், “நிபுணர் மதிப்பீட்டுக் குழு மற்றும் தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் சென்னை திருவல்லிக்கேணி அருகே கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க கடலோர ஒழுங்குமுறை மண்டலம் அனுமதி அளிக்கிறது. இந்த அனுமதி நிபந்தனைகளுக்கு உட்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விதித்துள்ள நிபந்தனை :

  • கட்டுமானம் தொடங்குவதற்கு முன் திட்டம் தொடங்க உள்ள இடத்தில் இருந்து 800 மீட்டர் தொலைவில் உள்ள ஐஎன்எஸ் அடையாரின் ஆட்சேபனை சான்றிதழை பெற வேண்டும்.
  • மண் அரிப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்
  • பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதனை நிர்வகிப்பதற்கான திட்ட அறிக்கை, அவசரகால வெளியேற்றத்துக்கான திட்ட அறிக்கை ஆகியவற்றை பிராந்திய சுற்றுச்சூழல் அலுவலகத்துக்கு வழங்க வேண்டும்.
  • தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும், நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்த தகவல்களை பொதுப்பணித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
  • நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயத்தின் எந்த உத்தரவும் அல்லது வழிகாட்டுதலும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்
  • தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதி கடிதம் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது.
  • நிபந்தனைகள் முழுமையாக ஏற்கப்படாதது கண்டறியப்பட்டால் அனுமதி திரும்பப் பெறப்படும் உள்பட 15 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.