வணிக வளாகம் தொடர்பான நீதிமன்ற உத்தரவு – புதிராகும் ஈரோடு கனி ஜவுளிச் சந்தை வியாபாரிகளின் எதிர்காலம்..!

ஈரோடு கனி ஜவுளிச்சந்தை வியாபாரிகளுக்காக, ரூ.52 கோடியில் கட்டப்பட்டு, திறப்பு விழா கண்ட வணிக வளாகம் ஒன்றரை ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.

கடைகளுக்கு அதிக முன்பணம், வாடகை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போதைய நீதிமன்ற உத்தரவால், கனி ஜவுளிச் சந்தை வியாபாரிகளின் எதிர்காலம் புதிராக மாறியுள்ளது. ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகே கனி ஜவுளிச்சந்தை வளாகம் உள்ளது. இங்கு 280 நிரந்தரக் கடைகள், 730 வாரச்சந்தை கடைகள் இயங்கி வருகின்றன.

இந்த கடைகள் இருந்த இடத்தில், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ், ரூ.52 கோடி மதிப்பில் நவீன வணிக வளாகம் கட்டும் பணி, கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டது. வளாகத்தின் ஒரு பகுதியில் தற்காலிக கடைகளை நடத்த வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. புதிய வணிக வளாகம் அமைந்ததும் மீண்டும் கடைகள் ஒதுக்கித் தரப்படும் என ஜவுளி வியாபாரிகளுக்கு உறுதி அளிக்கப்பட்டது.

இதன்படி, கனி ஜவுளிச்சந்தை புதிய வணிக வளாகம் 292 கடைகளுடன், 4 தளங்களாக நவீன வசதிகளுடன் கட்டப்பட்டது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு திறந்து வைத்தார். திறப்புவிழா கண்டு ஒன்றரை ஆண்டு ஆகியும், இதுவரை வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கடைகளுக்கான முன்பணத் தொகை அதிகரிப்பு, பொது ஏலம் மூலம் வாடகை நிர்ணயம் போன்ற மாநகராட்சியின் நிபந்தனைகளே இதற்கு காரணம்.

இது குறித்து கனி மார்க்கெட் வாரச்சந்தை ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது: புதிய வணிக வளாகம் கட்டப்பட்டதும், எங்களது வியாபாரிகளுக்கே அந்த கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற உறுதிமொழியின் அடிப்படையிலேயே, நாங்கள் கடைகளை காலி செய்து வணிக வளாகம் கட்ட இடத்தை விட்டுக் கொடுத்தோம்.

ஆனால், இப்போது வைப்புத் தொகையாக ரூ.8 லட்சத்தை முதலில் கட்டுமாறு கூறுகின்றனர். கடைகள் பொது ஏலத்தில் விடப்படும் என்றும், குறைந்த பட்ச வாடகையாக ரூ.31 ஆயிரத்து 500 என நிர்ணயம் செய்து, அதன்பின் ஏலத்தில் எவ்வளவு தொகை உயர்கிறதோ, அந்தத் தொகையை மாத வாடகையாக செலுத்த நாங்கள் ஒப்புக் கொண்டால், கடை ஒதுக்குவதாக கூறுகின்றனர்.

அதோடு, 12 மாத வாடகையை முன்பணமாகக் கட்ட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புக்கொண்டால், கடை ஒதுக்கப்படும். இந்த தொகை கட்டுப்படியாகாது என்று ஒதுங்கினால், உங்களுக்கு கடை இல்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் விதித்த நிபந்தனைப்படி பார்த்தால், ஒரு வியாபாரி கடை ஒதுக்கீடு பெற ரூ.13 லட்சத்துக்கு மேல் செலவிட வேண்டும். அதிகபட்ச வாடகையை மாதம் தோறும் கொடுக்க வேண்டும். குறைந்த தொகையை முதலீடாகப் போட்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் கனிமார்க்கெட் வியாபாரிகள், இந்த நிபந்தனைகளை ஏற்க முடியாமல் வேதனையில் தவித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தற்காலிகமாக அமைத்துள்ள கடைகளை, 60 நாட்களுக்குள் காலி செய்து விட்டு, மாநகராட்சி நிர்வாக விதிப்படி, வணிக வளாக கடைகளை ஏலம் விடவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், கனிஜவுளிச்சந்தை வியாபாரிகளின் எதிர்காலம் புதிராக மாறியுள்ளது. இது தொடர்பாக வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் கனி மார்க்கெட் வியாபாரிகள் முறையிட்டுள்ளனர்.

அப்போது, புதிய வணிக வளாகத்தில் முன்பணம், வாடகையைக் குறைத்து வழங்க வேண்டும். அப்படி வழங்காவிட்டால், தற்போது நாங்கள் நடத்தும் கடைகளைத் தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசியபோது, ‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட வணிக வளாகம் என்பதால், விதிமுறைகளின் படி தான் முன்பணம், வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் முடிவுகளில் மாற்றம் செய்ய, மாநில அளவில் குழுமம் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் இதுபோன்ற குழுமம் அமைக்கப்படும் போது, வியாபாரிகளின் கோரிக்கை பரிசீலிக்கப்பட வாய்ப்புள்ளது’ என்றனர்.