வரத்து குறைவால் கிருஷ்ணகிரி சந்தையில் புளி விலை அதிகரிப்பு..!

கிருஷ்ணகிரி பழையபேட்டை சந்தைக்கு வரத்துக் குறைவால் புளி விலை உயர்ந்துள்ள நிலையில், வரும் நாட்களில் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிகம், பேரிகை, தீர்த்தம், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி, மத்தூர், காவேரிப்பட்டணம், பர்கூர், ராயக்கோட்டை, ஊத்தங்கரை ஆகிய பகுதிகளில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட புளியமரங்கள் உள்ளன. இதன் மூலம் ஆண்டு தோறும் 30 ஆயிரம் டன்னுக்கு மேல் புளி மகசூல் கிடைக்கிறது.

இப்புளியைக் கிருஷ்ணகிரி பழையபேட்டையில் வாரந்தோறும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கூடும் சந்தையில் ஏலம் முறையில் விற்பனை செய்ய விவசாயிகள் கொண்டு வருகின்றனர். மேலும், கர்நாடக, ஆந்திர மாநில எல்லையோரக் கிராமங்களிலிருந்தும் விவசாயிகள் புளியை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர்.

இங்கு புளி தரம் பிரிக்கப்பட்டு கர்நாடக, ஆந்திர மாநிலங்களுக்கும், தமிழகத்தில் கோவை, வேலூர், சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில், தற்போது, சந்தைக்குப் புளி வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக வியாபாரிகள் சிலர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் மே மாதம் இறுதி வரை சந்தைக்கு புளி வரத்து அதிகம் இருக்கும். ஜூன் முதல் ஆகஸ்ட் வரை வரத்துக் குறைவாக இருக்கும். புளியமரங்களில் பூக்கள் பூக்கும் தறுவாயில் மழை பெய்ததால், பூக்கள் உதிர்ந்தன. இதனால், மகசூல் பாதிக்கப்பட்டது.

இதேபோல, சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட காரணங்களால் சாலைகளில் உள்ள புளியமரங்கள் அதிக அளவில் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. இதனால், சந்தைக்கு வரத்து குறைந்து, கடந்த மாதங்களை விட தற்போது, விலை அதிகரித்துள்ளது. கொட்டை புளி தரத்தைப் பொறுத்து, ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரையும், கொட்டை நீக்கப்பட்ட நார்ப் புளி ரூ.90 முதல் ரூ.100 வரையும், தோசைப் புளி ரூ.70 முதல் ரூ.110 வரையும், புளியங்கொட்டைரூ.15-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை கடந்த மாதத்தை விட ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் விலை மேலும் அதிகரிக்கும். வரும் காலங்களில் புளி விலை உயர்வைத் தடுக்க தரிசு நிலங்களில் புளியமரங்களை அதிகளவில் விவசாயிகள் நடவு செய்ய தோட்டக்கலைத் துறை மூலம் அரசு ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். புளியமரங்களில் பூக்கள் பூக்கும் தறுவாயில் மழை பெய்ததால், பூக்கள் உதிர்ந்தன. இதனால், மகசூல் பாதிக்கப்பட்டது.