வள்ளுர்வர் கோட்டம் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுவதால் அதனைக் கட்டுப்படுத்த புதிய மேம்பாலம் கட்டுவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
கோடம்பாக்க, நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, தியாகராய நகர் என அனைத்து பகுதிகளுக்கும் மையமாக இருப்பது வள்ளுவர் கோட்டம் சாலை சந்திப்பு. இந்தச் சாலை சந்திப்பில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். அதுவும் காலை 8 மணி முதல் 11 மணி வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும் பகுதி இது.
வேலைக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் என அந்தப் பகுதியை கடந்து செல்வதற்கும் பெரும் சிரமத்திற்குள்ளாக வேண்டியதாக இருக்கிறது. இந்நிலையில் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.98 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என்று கடந்த சட்டப் பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.
இதன்படி, சென்னை, வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் 570 மீ நீளத்துக்கு புதிய மேம்பாலம் கட்டப்படவுள்ளது. இந்த மேம்பாலம் பாம்குரோவ் ஹோட்டல் முன்பாக தொடங்கி கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் முடிவடையும் வகையில் அமைக்கப்படவுள்ளது. வடபழனி, கோயம்பேடு மேம்பாலம் போன்று நான்கு வழிகள் கொண்ட மேம்பாலமாக இது அமைய உள்ளது. குறிப்பாக வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் நேரடியாக உத்தமர் காந்தி சாலைக்கு சென்று சேரும் வகையில் இந்த மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது.
இந்நிலையில், வாகன நெரிசலை குறைக்க வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் மேம்பாலத்திற்கான நில எடுப்பு மற்றும் கட்டுமான பணிகளுக்காக ரூ.195 கோடிக்கு நிர்வாக அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதன்படி, மேம்பால கட்டுமான பணிகளுக்கு ரூ.67.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நில எடுப்பு பணிகளுக்கு ரூ.113.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேம்பாலம் கட்டுமான பணிகளுக்கு, 8014 ச.மீ அரசு நிலம் மற்றும் 2883 ச.மீ தனியார் நிலம் தேவை என்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் விரைவில் நில எடுப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது.