வாடிக்கையாளர்களிடமிருந்து 2,000 ரூபாய்நோட்டுகள்பெற்றுக்கொள்ளப்படும் என்று அமேசான்அறிவித்துள்ளது.
ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை விநியோகித்து வரும் இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனம் 2,000 ரூபாய் நோட்டுகளை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது. தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் தவிக்கும் மக்களுக்கு இது நிச்சயம் உதவும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி, ரூ.2000 கரன்சி நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்தது. அதனால் கடந்த மே 23 முதல் வரும் செப்.30-ம் தேதி வரையில் பொதுமக்கள் தங்கள் கைவசம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. நாளொன்றுக்கு ரூ.20,000 மதிப்பிலான நோட்டுகளை மக்கள் மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இந்நிலையில், அமேசான் இந்த அறிவிப்பை நேற்று (ஜூன் 21) அறிவித்தது. ‘கேஷ் லோட் அட் டோர் ஸ்டெப்’ என்ற சேவையின் கீழ் பயனர்கள் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை அமேசான் டெலிவரி பிரதிநிதிகளிடம் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள் அமேசான் தளத்தில் கேஒய்சி செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் பே மூலம் இதனை அந்நிறுவனம் செயல்படுத்துகிறது.
கேஷ் லோட் அட் டோர் ஸ்டெப் சேவையின் மூலம் மாதத்திற்கு 50,000 ரூபாய் வரையில் பயனர்கள் பலன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேஷ்-ஆன்-டெலிவரி மூலம் அமேசான் தளத்தில் பொருட்களை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள், அந்த பொருளுக்கான தொகை போக தங்கள் கையில் உள்ள கூடுதல் தொகையை பிரதிநிதிகளிடம் கொடுத்து, அதனை வாடிக்கையாளர்களின் அமேசான் பேவிற்கு கிரெடிட் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2,000 ரூபாய் நோட்டுகளையும் வாடிக்கையாளர்கள் கொடுக்கலாம் என அமேசான் தெரிவித்துள்ளது. இதனை அமேசான் பே இந்தியா இயக்குனர் விகாஸ் பன்சால் உறுதி செய்துள்ளார்.