விக்ரம் லேண்டரை வரவேற்ற சந்திரயான் – 2 ஆர்பிட்டர்..

நிலவின் சுற்றுவட்டப் பாதையில் பயணித்துகொண்டு இருக்கும் சந்திரயான் – 2 விண்கலத்தின் ஆர்பிட்டருடன் தற்போது நிலவை நெருங்கியுள்ள விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பை இணைத்துள்ளது.

நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ இரண்டாவது முறையாக 2019 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி சந்திரயான் – 2 விண்கலத்தை நிலவிற்கு அனுப்பினர். அதனின் தகவல் தொடர்பு கருவியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் தொடர்ந்து நிலவை சுற்றிக்கொண்டு வருகிறது. சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக நிலவை புகைப்படங்களை எடுத்து இஸ்ரோவிற்கு ஆர்பிட்டர் அனுப்பி வருகிறது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் – 3 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜூலை 14 ஆம் தேதி, எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தியது. அதனைத்தொடர்ந்து புவி வட்டப்பாதையை வெற்றிகரமாக அடைந்த விண்கலத்தில் சுற்றுவட்டப் பாதை படிபடியாக உயர்த்தப்பட்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.

அதனைத்தொடர்ந்து, மீண்டும் படிப்படியாக நான்கு முறை நிலவின் சுற்றவட்டப் பாதையில் சந்திரயான் – 3 விண்கலத்தின் பாதை குறைக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி உந்துவிசை கலனில் இருந்து லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டது. மேலும், உந்துவிசை கலன் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் தனித்து நிலவை சுற்றுவந்து புவியை ஆய்வு செய்யும் என்று இஸ்ரோ தெரிவித்தது.

உந்துவிசை கலனில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் தொடர்ந்து நிலவை சுற்றிவர ஆகஸ்ட் 18 மற்றும் ஆகஸ்ட் 20 ஆகிய தேதிகளில் de-boosting முறையில் மேலும் லேண்டரின் பாதை குறைக்கப்பட்டு நிலவிற்கு அருகில் கொண்டு செல்லப்பட்டது. இதன் மூலம் நிலவிலிருந்து அதிகபட்சம் 134 கிலோமீட்டர் என்ற தொலைவில் லேண்டர் பயணித்து வருகிறது. அதனைத்தொடர்ந்து லேண்டர் ஆகஸ்ட் 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நிலவை எடுத்தப் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டது.

ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் லேண்டரை சாப்ட் லேண்டிங் மூலம் தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக செயல்படுத்திகொண்டு வருகின்றனர். லேண்டரை இறுதிக் கட்டத்தில் நகர்த்துபோது, ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு தரையிறக்க திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருந்தனர். தற்போது தரையிறக்கும் நேரத்தை மாற்றி ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு தரையிறக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 21) நிலவில் தரையிறங்கும் இடத்தை தேர்வு செய்து வரும் விக்ரம் லேண்டரில் உள்ள கேமரா எடுத்த புகைப்படங்ளை இஸ்ரோ வெளியிட்டது. தற்போது மேலும் திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில், சந்திரயான் – 2 ஆர்பிட்டருடன் விக்ரம் லேண்டர் தகவல் தொடர்ப்பை இணைத்துள்ளது. இது குறித்த தகவலை இஸ்ரோ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் சந்திரயான் – 2 ஆர்பிட்டர், சந்திரயான் – 3 லேண்டரை “வா நண்பா” என்று வரவேற்றுள்ளது என பதிவிட்டுள்ளனர். இரு கருவிகளுக்கு இடையே இருவழி தகவல் தொடர்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விக்ரம் லேண்டர் அனுப்பும் தகவல்கள் அனைத்தும் இனி சந்திரயான் – 2 ஆர்பிட்டர் மூலமாகவே இஸ்ரோவுக்கு கிடைக்கும்.

மேலும், லேண்டர் தரையிறங்கும் நேரடி தகவல்கள் ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 5.20 மணிக்கு தொடங்கப்படும் என்று மாற்றியமைக்கப்பட்ட புதிய நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.