விஜயின் லியோ’ படத்தில் இணைகிறார் அனுராக்காஷ்யப்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிறைவடைந்துவிட்டன. வரும் அக்டோபரில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தில் விஜய் பாடிய ‘நா ரெடி’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் இயக்குநர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பும் ‘லியோ’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான் அளித்த பேட்டி ஒன்றில், ‘லோகேஷின் LCU-வில் நான் சாக விரும்புகிறேன்’ என்று அனுராக் காஷ்யப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.