வெப்ப அலை தாக்கம்  காரணமாக 3 மாநிலங்களில் 100 பேர் பலி

உத்தரப் பிரதேசம், பிஹார், ஒடிசா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் வெப்ப அலை காரணமாக 100 பேர் பலியாகியுள்ளனர்

உத்தரப் பிரதேசம், பிஹார், ஒடிசா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் வெப்ப அலை காரணமாக 100 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் நாட்டில் பரவலாகப் பல பகுதிகளிலும் இன்றும் வெப்ப அலை விசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் பாலியா மாவட்டத்தில் ஜூன் 11 தொடங்கி நேற்று வரை 83 பேர் வெப்ப அலை சார்ந்த நோய்களால் இறந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் பருவமழை தள்ளிப்போகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

பிஹாரில் 45 பேர் வெப்ப அலை காரணமாக உயிரிழந்துள்ளனர். ஒடிசாவில் இதுவரை ஒருவர் வெப்ப அலையால் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ஆனால் 20 பேர் இறந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலியா மாவட்ட தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.கே.யாதவ் கூறுகையில், “ஜூன் 15ல் 154 பேர் வெப்பம் சார்ந்த நோய் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டனர். இதனை ஹைபோதெர்மியா எனக் கூறுகிறோம். பெரும்பாலானோர் காய்ச்சல், குழப்பமான மனநிலை, வயிற்றோட்டம் போன்ற பாதிப்புகளுடன் இருந்தனர். ஜூன் 15-ல் 23 பேர், ஜூன் 16-ல் 20 பேர், ஜூன் 17-ல் 11 பேர் இறந்தனர். மொத்தமாக ஜூன் 18 வரை 83 பேர் உயிரிழந்துள்ளனர். இவற்றில் 44 மரணங்கள் வெப்ப அலையால் என்பது அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய 39 மரணங்களுக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அவர்களும் வெப்ப அலை நோய் அறிகுறிகளோடு அனுமதிக்கப்பட்டிருந்தாலும் வெவ்வேறு உடல் உபாதையும் இருந்ததால் அது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது” என்றார்.

இந்நிலையில் மருத்துவர் எஸ்கே சிங், என்கே திவாரி அடங்கிய குழுவை மாநில அரசு உ.பி.யின் பாலியா மாவட்டத்துக்கு அனுப்பியுள்ளது. இன்று ஜூன் 19 உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்தச் சூழலில், இப்படியான வெப்ப அலை மரணங்கள் இனி வருங்களில் நாடு இதுபோன்ற கடுமையான கோடையை சந்திக்கலாம். அதனால் அரசு நீடித்த நிலையான திட்டங்களை வகுக்க வேண்டும் என்பதையே உணர்த்துவதாக சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.