வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது -சந்திரயான் – 3..!

சந்திரயான்-3′ விண்கலத்தை சுமந்து செல்லும் ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு உள்ளன. தற்போது அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை ஓட்டமும் நிறைவடைந்த நிலையில், எரிபொருள் நிரப்பும் பணிகளும் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.

‘சந்திரயான் 3’ விண்கலத்தில் உள்ள ‘இன்டர்பிளானட்டரி’ என்ற எந்திரம் 3 முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. ராக்கெட்டில் உள்ள ‘புரபுல்சன்’ பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ. தொலைவுக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைத்து பொருத்தப்பட்டு உள்ளது. பின்னர் லேண்டர் பகுதி நிலவில் மெதுவாக தரையிறங்கும் பகுதியாகும்.

ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ராக்கெட்டுக்கான இறுதிக் கட்டப்பணியான 25½ மணி நேர கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது. முழுமையாக கவுண்ட்டவுனை முடித்து கொண்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 2 மணி 35 நிமிடம் 17 வினாடியில் ராக்கெட் விண்ணில் பாய்கிறது.

நீண்ட பயணத்துக்குப் பிறகு இந்த விண்கலம் ஆகஸ்ட் கடைசி வாரத்தில் நிலவின் சுற்றுப்பாதையை அடையும். பின்னர் அது நிலவின் மேற்பரப்பில் 100 கிமீ விளிம்பை அடையும். இங்கிருந்து வேகத்தை குறைத்து 23ம் தேதி நிலவில் மென்மையாக தரையிறங்குவதுதான் நோக்கம். 30 நாட்களில் நிலவில் இந்த விண்கலம் இறங்கி தனது பணியைத் துவக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதன் ரோவர், பிரக்யான் மற்றும் லேண்டர் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும். சந்திரயான் -2 இறக்குவதற்கு முயற்சித்த அதே இடத்தில் சந்திரயான் -3 ஐ இறக்குவதற்கு அதாவது தென் துருவத்தில் 70 டிகிரி அட்சரேகைக்கு அருகில் இஸ்ரோ தேர்வு செய்துள்ளது. இந்த முறை திட்டமிட்டபடி சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்தில் மென்மையாக தரையிறங்கினால், உலகின் முதல் தென் துருவ நிலவு பயணமாக இருக்கும். இதுவரை, அனைத்து விண்கலங்களும் நிலவின் பூமத்திய ரேகையில் அல்லது சில டிகிரி தென்துருவத்தில் இருந்து விலகி தரையிறங்கியுள்ளன.

அல்லது வடக்குப் பகுதியில் தரையிறங்கியுள்ளன. நிலவின் தென் துருவம் மிகவும் கரடுமுரடானது. வெளிச்சம் இருக்காது. இருட்டாக இருக்கும். சூரிய ஒளி எப்போதும் இங்குபட்டது இல்லை. இது மிகவும் குளிர்ச்சியான பகுதியாக – 230 டிகிரி செல்சியசில் இருக்கும். இருட்டாக இருப்பது, மிகவும் குளிர்ச்சியான பகுதியாக இருப்பது இவை இரண்டுமே மின்சாதன பொருட்கள் இயங்குவதற்கு சவாலாக இருக்கும். இத்துடன் தென் துருவம் பெரிய பள்ளங்களால் நிரம்பியுள்ளது, இது சில ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் கூட நீண்டுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ளபடி, இங்குள்ள கடினமான சூழல் சோதனைகள் மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ள கடினமாக்குகிறது. இதன் கண்டுபிடிப்புகள் உலகை ஆச்சரியப்பட வைக்கலாம். மேலும், இந்தியாவின் 2008 ஆம் ஆண்டில் ஏவப்பட்ட சந்திரயான்-1, நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை வெளிப்படுத்தியது. தவிர, தென் துருவத்தில் உள்ள நிலவும் அதீத குளிர், இந்தப் பகுதியில் காணப்படும் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக உறைந்து இருக்கும் பனிக்கட்டிகள் நிலைமையை நமக்கு எடுத்துரைக்கும். எனவே, நிலவின் இந்தப் பகுதியில் இருந்து எடுக்கப்படும் மண் மற்றும் பாறைகள் ஆரம்பகால சூரிய குடும்பத்திற்கான குறிப்புகளை வழங்குவதற்கு சான்றுகளாக இருக்கலாம்.