வெளியானது +2 தேர்வு முடிவுகள் : கடந்த ஆண்டை விட அதிகரித்த தேர்ச்சி விகிதம்; விருதுநகர் மாவட்டம் முதலிடம்!

இன்று காலை +2 தேர்வு முடிவுகள் வெளியானது. மொத்தம் 94% மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளார் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றன. அதில் மொத்தம் 8.17 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி இருந்தனர். மே 8ம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருந்த நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை வெளியிட்டார் அமைச்சர்.

மொத்தம் 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 பேர் தேர்வு எழுதி இருந்தனர். அதில் 4 லட்சத்து 21 ஆயிரத்து 13 பேர் மாணவிகள், 3 லட்சத்து 82 ஆயிரத்து 371 பேர் மாணவர்கள். இன்று காலை வெளியான தேர்வு முடிவில், 94.03 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவிகள் 96.38% பேரும் மாணவர்கள் 91.45% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர். . கடந்த ஆண்டு 93% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஒரு சதவிகித மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி விகிதத்தில் முதல் இடத்தில் விருதுநகர் மாவட்டமும், இரண்டாம் இடத்தில் திருப்பூர், மூன்றாம் இடத்தில் பெரம்பலூர் மாவட்டம் பெற்றுள்ளது. 2 பேர் மட்டுமே தாய் மொழி தமிழில் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

மேலும் இயற்பியல் பாடத்தில் 812 பேரும், வேதியியல் பாடத்தில் 39,09 பேரும், உயிரியல் பாடத்தில் 1494 பேரும், தாவரவியல் பாடத்தில் 340 பேரும், விலங்கியல் பாடத்தில் 154 பேரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கணக்குப்பதிவியலில் 6,573 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 4,618 பேரும், வணிகவியல் பாடத்தில் 5,678 பேரும், பொருளியல் பாடத்தில் 1706 பேரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.