வெள்ளத்தில் தத்தளிக்கும் டெல்லி நடந்தது என்ன.?

கடந்த செவ்வாய்க் கிழமைக்குப் பின்னர் தலைநகர் டெல்லியில் பெரியளவில் மழை இல்லை. ஆனாலும் இன்று காலை டெல்லியில் ஐடிஓ, சிவில் லைன்ஸ் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சூழப்பட்டுள்ளன. ஏற்கெனவே கடுமையான போக்குவரத்து நெருக்கடியை சந்திக்கும் டெல்லியில் இந்த திடீர் வெள்ளத்தால் மேலும் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில் கனமழை இல்லாமல் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளம் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.

மழையில்லாமல் வெள்ளம்! மழையில்லாமல் வெள்ளமா என்று ஆச்சரியம் ஏற்படலாம். அதற்கு சில காரணங்களை நிபுணர்கள் பட்டியலிடுகின்றனர். யமுனை ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து வரலாறு காணாத வண்ணம் உயர்ந்து வருவதே நகருக்குள் ஏற்பட்டுள்ள இந்த திடீர் வெள்ளத்துக்கு முதல் காரணமாக இருக்கிறது. இன்று காலை 9 மணியளவில் யமுனையின் நீர்மட்டம் 207.25 மீட்டராக இருந்தது.

யமுனையின் நீர்மட்டம் இவ்வளவு தூரம் உயர்ந்ததற்கு ஹரியாணா மாநிலத்தில் இருந்து ஹத்னிகுண்ட் தடுப்பணை வாயிலாக வெளியேற்றப்படும் உபரி நீர் தான் காரணம். ஆனால் ஒவ்வொரு பருவமழை காலத்திலும் இதுபோல் ஹத்னிகுண்ட் தடுப்பணை வாயிலாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு யமுனையில் கலப்பது இயல்புதான். இது டெல்லிவாசிகளுக்கே தெரிந்த விஷயம்தான். என்றாலும் கூட இந்த ஆண்டு மட்டும் இந்த அசாதாரண சூழலுக்குக் காரணம் என்னவென்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

குறைந்த நேரத்தில் வந்து சேர்ந்த நீர்: மத்திய நீர்வள ஆணையத்தின் அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், “ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து டெல்லிக்கு உபரி நீர் வெகு சீக்கிரமாக வந்தடைந்துள்ளது. நீர்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் காரணமாக அது கடந்து செல்ல ஒரு குறுகிய பாதை மட்டுமே உள்ளது. வெள்ளம் பாய்வதன் வேகமும் மிக அதிகமாக இருக்கிறது. இதனால் பல வழிகளிலும் உபரி நீர் வெகு துரிதமாக யமுனையை வந்தடைந்து அங்கு நீர்மட்டத்தை தொடர்ந்து உயரச் செய்து வருகிறது. அதேபோல், வண்டல் மண் அதிகமாக சேர்ந்ததன் காரணமாக யமுனை ஆற்றுப் படுகையும் உயர்ந்துள்ளது. இதனாலேயே அதிக மழையில்லாவிட்டாலும் கூட யமுனையின் நீர்மட்டம் தொடர்ந்து வரலாறு காணாத புதிய உச்சங்களை தொட்டு வருகிறது” என்றனர்.

குறுகிய காலத்தில் அதிகனமழை: இவை மட்டுமல்லாது டெல்லியில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகனமழை பெய்தது. ஞாயிறு காலை 8.30 மணி நிலவரப்படி 15.3 செ.மீ மழை பதிவானது. இதனால் யமுனை ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்திருந்த நிலையில் அதில் மேலும் மேலும் ஹத்னிகுண்ட் தடுப்பணை வாயிலாக வரும் நீரும் சேர்ந்து கொண்டே இருக்கிறது.

டெல்லி கனமழை குறித்து டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கூறுகையில், ”வெறும் 24 மணி நேரத்தில் 15 செ.மீ மழை பெய்துவிட்டது. இதனை சமாளிக்க டெல்லி அரசு அமைப்புகள் பழக்கப்பட்டிருக்கவில்லை. ஒருவேளை ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட அளவு மழை பெய்திருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாக இருந்திருக்காது” என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது. இந்தச் சூழலில் இன்று மாலை 5 மணிக்குள் யமுனையின் நீர்மட்டம் இன்னும் உயரும் என்றே மத்திய நீர்வள ஆணையம் கணித்துள்ளது.