வெள்ளையில் இருந்து காவி நிறத்துக்கு மாறும் ‘வந்தே பாரத்’ ரயில்!

வந்தே பாரத் விரைவு ரயில் எளிதில் அழுக்காவதை தவிர்க்க, வெள்ளை நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாற்ற ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஒன்றாக சென்னை ஐ.சி.எஃப் (ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை) விளங்குகிறது. இங்கு 25-க்கும் மேற்பட்ட வடிவமைப்பில் 70,000-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு சிறப்பு வாய்ந்த ஐ.சி.எஃப் ஆலையில் தற்போது நாட்டிலேயே அதிக வேகத்தில் இயங்கும் ‘வந்தே பாரத்’ ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

முதல் ‘வந்தே பாரத்’ ரயில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ‘ரயில் 18’ என்ற பெயரில் கடந்த 2018-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்த ரயிலின் சேவை புதுடெல்லி – வாரணாசி இடையே கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 15-ல் தொடங்கியது. தொடர்ந்து, தயாரிக்கப்பட்ட ‘வந்தே பாரத்’ ரயில்கள் நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வேயில் சென்னை – மைசூர் இடையேவும், சென்னை – கோவை இடையேவும், திருவனந்தபுரம் – காசர்கோடு இடையேவும் தலா ஒரு ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்படுகிறது.

இதையடுத்து, ‘வந்தே பாரத்’ ரயில் தயாரிப்பை அதிகப்படுத்த ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. மேலும், ‘மெட்ரோ வந்தே பாரத்’ ரயில், தூங்கும் வசதி வந்தே பாரத் ரயில், சரக்கு வந்தே பாரத் ரயில், புறநகர் வந்தே பாரத் ரயில் ஆகிய 4 வகைகளில் வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை ஐ.சி.எஃப்-ல் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தற்போது 25 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 2023-24-ம் உற்பத்தியாண்டில், சென்னை ஐசிஎஃப்-பில் மட்டும் 736 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வந்தே பாரத் விரைவு ரயில் வெள்ளை நிறத்திலிருந்து காவி நிறத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்தால் ரயில் பெட்டிகள் அதிக அழுக்காவதை தவிர்க்கும் விதமாக வெள்ளை நிறத்திலிருந்து காவி நிறத்துக்கு மாற்றம் செய்ய ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.