ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் இடையிலான இரயில் சேவை மீண்டும் தொடக்கம் : இரயில் பாதை சீரமைக்கப்பட்டது – இன்று முதல் இரயில் சேவை துவங்கியது!

ஒடிசாவில் இரயில் பாதை சீரமைக்கப்பட்டதனால், இன்று முதல் இரயில் சேவை தொடங்கப்பட்டது.

கடந்த வாரம் ஒடிசா பாலசோர் மாவட்டத்தில் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இரயில் சரக்கு ரெயில் மீது மோதி தடம் புரண்டது. இந்த இரயில் பெட்டிகள் மீது பெங்களூர் – ஹெளரா இரயில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். 1000க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அதில் சிலர் உயிருக்கு ஆபத்தான் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தினால் அந்த வழியாக இயக்கப்பட்டுவந்த 90 இரயில் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான இரயில்வே ஊழியர்கள் சிதைந்து கிடந்த இரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று முற்றிலுமாக சீரமைக்கப்பட்ட நிலையில், இன்று முதல் ஒடிசா பாலசோர் மாவட்டத்தின் வழியாக இரயில்கள் இயக்கம் தொடங்கப்பட்டது. ஹெளரா – புரி வந்தே பாரத் இரயில் அவ்வழியாக குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டது. இன்று காலை ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் இடையிலான கோரமண்டல் விரைவு இரயில் சென்னையில் இருந்து புறப்பட்டது. இதனால் இரயில் சேவைகள் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளது.