ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் லண்டனில் குத்திக் கொலை : பிரேசில் இளைஞரின் வெறிச்செயல்..

லண்டனில் தங்கி வேலைபார்த்துவந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம்பெண் தேஜஸ்வினி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் 27 வயதான தேஜஸ்வினி. இவர் பட்ட மேற்படிப்பிற்காக கடந்த 3 அண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார்.

பட்ட மேற்படிப்பை முடித்த அவர் அங்கேயே தற்காலிகமாக வேலை செய்து வந்திருக்கிறார். மேலும் லண்டனில் உள்ள வெம்ப்லே என்ற பகுதியில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் தன்னுடைய தோழியுடன் வசித்து வதிருக்கிறார் தேஜஸ்வினி.

இந்நிலையில் இந்திய நேரப்படி நேற்று தேஜஸ்வினியின் வீட்டிற்குள் கத்தியுடன் புகுந்த இளைஞர் ஒருவர், தேஜஸ்வினியையும் அவரது தோழியையும் சரமாரியாக குத்தியுள்ளார். அதில் தேஜஸ்வினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். மேலும் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவரது தோழி, காவல்துறைக்கு போன் செய்து தகவல் தெரிவித்திருக்கிறார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த லண்டன் போலீசார், உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனிடையே கொலை செய்துவிட்டு தப்பியோடிய பிரேசில் நாட்டு இளைஞரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு இளைஞரையும் கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

அடுத்த மாதம் அவரது திருமணம் நிச்சயத்திற்காக ஹைதராபாத் வர இருட்ந்ஹ தேஜஸ்வினி இப்படி அநியாயமாக கொலை செய்யப்பட்டிருப்பதாக அவரது தந்தை கண்ணீர் மல்க தெரிவித்திருக்கிறார். தேஜஸ்வினியின் உறவினர்கள் அவரது உடலை இங்கிலாந்தில் இருந்து ஐதராபாத்துக்கு கொண்டுவர தேவையான உதவிகளை செய்யும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.