காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட முடிவு: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்!

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய தண்ணீரை திறந்துவிடக்கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதிய நிலையில், 10 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட முடிவு செய்திருப்பதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் குறுவை சாகுபடிக்கு திறந்துவிடப்படும் காவிரி நீரை, கர்நாடக அரசு திறந்துவிடாமல் இருந்த காரணத்தினால், தமிழ்நாட்டுக்கு முறைப்படி தரவேண்டிய தண்ணீரை தரவில்லை. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இந்தச் சூழலில் டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார், ‘சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். தினமும் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிட வேண்டும்’ என உத்தரவிட்டார். இதற்கு கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்ததால் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு அரசு வெளியேறியது.

இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக முலமைச்சர் சித்தராமையா கூறுகையில், ‘தமிழகத்துக்கு நீர் திறப்பது தொடர்பாக காவிரி நீர்ப்பாசன கழக நிபுணர்கள், சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தினமும் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். செப்டம்பர் மாதம் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய 36.76 டிஎம்சி தண்ணீரையும் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இன்று காலை காங்கிரஸ் அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தமிழகத்திற்கு 10 டி.எம்.சி. தண்ணீர் திறக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டதாக அவர் கூறினார்.