மொராக்கோ நாட்டில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக தகவல்.
மொராக்கோ நாட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.11 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. நள்ளிரவில் மக்கள் உறங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். நிலநடுக்கத்துக்கு இதுவரை 1037 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் சிறிய அளவில் காயமடைந்து உயிர் தப்பியுள்ளனர்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்நாட்டைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர், போலீஸார், தீயணைப்புப் படையினர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவு, பகலாக அங்கு மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. நாட்டின் தலைநகர் ரபாத் முதல் மாரகேஷ் பகுதி வரை நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பகுதிகளிலும் பயங்கர பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல இடங்களில் வீடுகள், கட்டிடங்கள் தரைமட்டமாயின.
ரபாத் முதல் காசாபிளாங்கா நகரம் வரை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தலைநகர் ரபாத் பகுதியிலிருந்து தென்மேற்கு பகுதியான மாரகேஷ் பகுதியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ரபாத், காசாபிளாங்கா, எஸ்ஸாஅவுரா பகுதிகளிலும் நன்றாக உணரப்பட்டுள்ளது.
இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அல்-ஹைவுஸ், தரோவ்டனட் மாகாணங்களைச் சேர்ந்தவர்கள். அதேபோல் குவார்ஸாஸாட், சிக்கவ்வா, அஸிலால், யூசோபியா, மாரகேஷ், அகாதிர், காசாபிளாங்கா பகுதிகளிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மட்டுமே தற்போது கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் இடிந்த கட்டிடங்களின் மதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி, ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.