ரூ.10,000 கோடி மதிப்பில் மழை சேதம்:மாநிலப் பேரிடர்’ ஆக அறிவித்தார் இமாச்சலப் பிரதேச முதல்வர்!

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை, நிலச்சரிவு பாதிப்புகளின் சேத மதிப்பு ரூ.10,000 கோடி என்றும், இது ‘மாநிலப் பேரிடர்’ ஆக அறிவிக்கப்படுகிறது என்றும் அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.

மலைப்பிரதேச மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் அம்மாநிலம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. சிம்லாவில் கோயில் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்கள் உட்பட மழை பாதிப்புகளால் இதுவரை 74 பேர் உயிரிழந்தனர். மழை பாதிப்புகள் குறித்து பேசிய இமாச்சலப் பிரதேச முதல்வர் சுவிந்தர் சிங் சுகு,”தேசிய பேரிடர் மீட்பு படை, இந்திய ராணுவம் போன்ற மத்திய அரசு குழுக்களின் உதவியுடன் மாநிலத்தின் இயல்பு நிலையை மீட்டெடுக்க மீட்பு பணிகள் இரவு பகலாக நடந்து வருகின்றன. மழையினால் பாதிக்கப்பட்டர்வர்கள் குறிப்பாக வீடிழந்தவர்கள் அவர்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க மாநில அரசு தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்யும்.

மாநிலத்தில் மழை பாதிப்பினால் உண்டாகியிருக்கும் சேதத்தின் மதிப்பு ரூ.10,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மழை பாதிப்பு ‘மாநிலப் பேரிடர்’ ஆக அறிவிக்கப்படுகிறது. அதற்கான உத்தரவு விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.

சிம்லாவில் வீடுகள் இடிந்து விழுந்ததுக்கு பிஹார் கட்டுமான தொழிலாளர்களைக் குற்றம்சாட்டிய முதல்வரின் அறிக்கை குறித்த சர்ச்சைக்கு பதில் அளித்த முதல்வர் சுகு, “அந்த அறிக்கை எங்கிருந்து வந்தது. அவர்களிடம் தயவு செய்து அரசியல் செய்யவேண்டாம் என்று கூறுங்கள்” என்றார். முன்னதாக, இதுகுறித்து வியாழக்கிழமை கருத்து தெரிவித்திருந்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், “கனமழையினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு பிஹார் மக்கள் மீது குற்றம் சுமத்தியதன் மூலம், காங்கிரஸ் கட்சி அதன் உண்மையான எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

பலி எண்ணிக்கை அதிகரிப்பு: மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. மீட்புக் குழுவினர் சிம்லாவில் கோயில் இடிந்து விழுந்த இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு இன்னும் 8 பேர் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், மாநில முதல்வர் சுகு, மழை வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மண்டி மாவட்டத்தின் பகுதிகளான, மதேதி, பல்ட்வாரா, மசேரன் மற்றும் சார்காஹத் தொகுதியின் ஜூகைன் ஆகிய பகுதிகளை வியாழக்கிழமை பார்வையிட்டார். இதனிடையே அடுத்த நான்கு, ஐந்து நாட்களுக்கு பரவாலக மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கர் அரசு ரூ.11 கோடி உதவி: பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள மலை மாநிலமான இமாச்சலப் பிரதேசத்துக்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ரூ.11 கோடி நிதியுதவி அறிவித்துள்ளார். முன்னதாக, வியாழக்கிழமை சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், இமாச்சலப்பிரதேச மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவிடம் தொலைப்பேசியில் பேசி, வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், இந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு உதவி செய்தாக உறுதியளித்திருந்தார்.

கடந்த ஜூன் 24-ம் தேதி தொடங்கிய பருவ மழையில் இமாச்சலில் இதுவரை மழை பாதிப்புகளால் 217 பேர் உயிரிழந்தனர். 11,301 வீடுகள் முழுமையாகவோ பாகுதியாகவோ சேதமடைந்துள்ளன என்று மாநில அவசர செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் இன்னும் 506 சாலைகள் மூடப்பட்டுள்ளன, 408 மின்மாற்றிகள், 149 நீரேற்று நிலையங்கள் சீர்குலைந்துள்ளன.