11 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யும் வோடாஃபோன் நிறுவனம் – அதிர்ச்சியில் ஊழியர்கள்

11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக வோடாஃபோன் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

வோடாஃபோன் நிறுவனத்தில் தற்போது ஒரு லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். அதில் ஏற்கனவே இந்தாண்டு துவக்கத்தில் இத்தாலியில் ஆயிரம் பேரையும், ஜெர்மனியில் 1300 பேரையும் பணி நீக்கம் செய்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது புதிய தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள மார்க்ரெட்டா, “எங்கள் நிறுவனத்தில் செயல்திறன் போதுமானதாக இல்லை. எங்களுக்கு வாடிக்கையாளர்கள் முக்கியம். அவரக்ளை வைத்துதான் எங்களுடைய வளர்ச்சியை தீர்மானிக்க முடியும். அதனால், எங்களுடைய சேவையை மக்களுக்கு எளிமையாக வழங்கவும், புதிய தொழில்நுட்பங்கள் மூலம் அதனை மேம்படுத்தவும் முடிவு செய்திருக்கிறோம்.

அதனால், அதற்கு தடையாக உள்ள சில சிக்கல்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் விளைவாக அடுத்த மூன்று வருடங்களில் 11 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்குவதாக இருக்கிறோம்” என தெரிவித்திருக்கிறார்.

கடந்த நான்காவது மார்ச் காலாண்டில் 1.3% சரிவைக் கண்டுள்ளது வோடாஃபோன் நிறுவனம். இந்நிலையில் இப்போது ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கை கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.