12 ஆயிரம் அடி ஆழத்தில் இருந்து மீட்கப்பட்ட டைட்டன் நீர் மூழ்கி கப்பலின் சிதைந்த பாகங்கள் – உயிரிழந்தவர்களின் சடலங்கள் இருப்பதாக தகவல்?

டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களைக் காணச்சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் ஐந்து பேருடன் வெடித்துச் சிதறியதில், தற்போது அந்தக் கப்பலின் பாகங்களை மீட்டுள்ளது அமெரிக்க கடலோர காவல்படை!

கடந்த வாரத்தில் வடக்கு அட்லாண்ட்டிக் கடலின் ஆழத்தில் சிதைந்த நிலையில் உள்ள டைட்டானிக் கப்பலை காண்பதற்காக டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் ஐந்து பேர் சென்றனர். அப்போது நீர்மூழ்கி கப்பல் அதிக அழுத்தத்தின் காரணமாக வெடித்து சிதறி கோடீஸ்வரர்கள் உள்ளிட்ட ஐந்து பேரும் பரிதாபமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

கனடா மற்றும் அமெரிக்க நாட்டை சேர்ந்த கடலோர கண்காணிப்பை மேற்கொள்ளும் கடற்படையின் கப்பல்களில் இருந்து, கடலுக்கு அடியில் தொலைவில் இருந்து இயக்கக் கூடிய வாகனத்தைக் கொண்டு தேடுதல் மற்றும் மீட்பு பணி மேற்கொண்டனர். தேடுதல் பணியின் இறுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த கடலோர காவல் படை உயர் அதிகாரி, “டைட்டன் பேரழுத்தத்தின் காரணமாக சிதைந்திருக்கலாம். இதில் 5 பேரும் உயிரிழந்திருக்கலாம்” என்று அறிவித்தார்.

டைட்டன் நீர்மூழ்கி சுற்றுலா வாகனத்தின் சிதிலமடைந்த பகுதிகள் கடலில் 12,000 அடி ஆழத்தில் இருந்து மீட்கப்பட்டதாக தகவல் வெளியான சில மணி நேரத்தில் அவற்றில் ஒட்டியிருந்த உடல் எச்சங்கள் பற்றிய தகவலை அமெரிக்க கடலோர காவற்படை வெளியிட்டுள்ளது. மேலும், டைட்டன் வாகனத்தின் சிதைந்த பாகங்கள் நியூஃபவுண்ட்லேண்ட் கொண்டுவரப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.