உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை வழங்குவதற்கு நடப்பு ஆண்டில் ரூ.13,000 கோடி நிதி?

உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் ரூ.13,000 கோடி நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு, ஜவுளி, மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து தயாரிப்பு, சோலார் பேனல், பேட்டரி, ட்ரோன் உட்பட 14 துறைகளில் முதலீட்டை ஈர்க்க, அத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு 2021-ம் ஆண்டு ரூ.1.97 லட்சம் கோடி ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்தது.

இந்த நிதியிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்டத் தொகை இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டு மார்ச் மாதம் வரையில், இத்திட்டத்தின் கீழ் ரூ.2,900 கோடி வழங்கப்பட்டுள்ளது.

சில துறைகளில் ஊக்கத் தொகை திட்டத்தால் பலன் குறைவாக உள்ளது. இதனால், ஊக்கத்தொகை திட்டத்தில் மத்திய அரசு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊக்கத்தொகை குறித்து தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை செயலர் ராஜேஷ் குமார் சிங் கூறுகையில், “பிஎல்ஐ திட்டத்தின்கீழ் மத்திய அரசு சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளும் நிலையிலும், நடப்பு ஆண்டில் ரூ.13 ஆயிரம் கோடி ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தால், இதுவரையில் ரூ.78,000 கோடி முதலீடு வந்துள்ளது” என தெவித்துள்ளார்.