17 வயது சிறுவனை சுட்டுக் கொலை செய்த காவல்துறை – வீதியில் இறங்கி போராடும் மக்கள் : பிரான்சில் நீடிக்கும் பதற்றம்!

17 வயது சிறுவனை பிரான்ஸ் போலீசார் சுட்டுக் கொலை செய்த சம்பவத்தால் மக்கள் போராட்டத்தில் குதித்ததால் நாடே கலவர பூமியாக காட்சியளிக்கிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகே உள்ளது நான்டெர்ரே நகரம். கடந்த வாரம் இந்தப் பகுதியில் போக்குவரத்து சிக்னலில் நிற்காமல் போக்குவரத்து விதியை மீறி ஒரு கார் வேகமாக சென்றிருக்கிறது. அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை துரத்தி சென்றனர். அப்போது அந்த காரை நிறுத்துவதற்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் காரில் இருந்த 17 வயது ஆப்பிரிக்க சிறுவன் கொல்லப்பட்டான்.

சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யபப்ட்ட சம்பவத்தின் வீடியோ அங்குள்ள சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து சிறுவனுக்கு ஆதரவாக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். நாடு முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. எனவே போராட்டத்தை ஒடுக்க போலீசார் தடியடி நடத்தினர். அப்போது இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் 24 போலீசார் உள்பட பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. மேலும் பல கட்டிடங்கள், கார்களை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். 5-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. கடந்த 5 நாட்களாக 1,311 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதற்கிடையே சிறுவனுக்கு ஆதரவான போராட்டம் அண்டை நாடுகளுக்கும் பரவியது. அதன்படி சுவிட்சர்லாந்து நாட்டின் லொசேன் நகரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக 7 பேரை அந்த நாட்டின் போலீசார் கைது செய்தனர்.

நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அதிபர் மேக்ரான் மேற்கொள்ளவிருந்த ஜெர்மன் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதுகுறித்து அவர் பேசும்போது, “நாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு அடுத்த சில நாட்களுக்கு தான் பிரான்சில் தங்க விரும்புவதாக தெரிவித்தார். மேலும் வன்முறையை பயன்படுத்தி போராட்டக்காரர்கள் பொதுச்சொத்துகளை சூறையாடி வருகின்றனர். எனவே பெற்றோர் தங்களது பிள்ளைகளை போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்த வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.