ரூ.2000 நோட்டு சர்ச்சைகளும் – தீர்வுகளும்!

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இந்நிலையில் அதுகுறித்த பல்வேறு சர்ச்சைகள் மக்களிடையே நிலவி வருகிறது. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் பண மதிப்பிழப்பு கொண்டுவந்தபோது பழைய ரூபாய் நோட்டுகளை எல்லாம் திரும்ப பெற்று, புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில், புதிய ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அதில், புதிய ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. வங்கிகளில் ரூ.2000 நோட்டுகளை கொடுத்து செல்லுபடியாகும் ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். ஒருவர் ஒரே நேரத்தில் பத்து 2000 ரூபாய் நோட்டுகளை, அதாவது 20 ஆயிரம் வரை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

மேலும், வயதானவர்கள் வரிசைகள் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு சிறப்பு கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 23ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், எஸ்.பி.ஐ வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு எந்த ஆவணங்களும் சமர்ப்பிக்க வேண்டியது இல்லை என அறிவித்திருக்கிறது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகளை பயணிகளிடம் இருந்து வாங்க கூடாது என போக்குவரத்து கழகம் அறிவுறுத்தி இருக்கிறது. ஆகையால், 2000 ரூபாய் நோட்டுகளை வேறு எங்கும் மாற்றுவதைக் காட்டிலும் வங்கிகளில் கொண்டுபோய் மாற்றுவதே பொதுமக்களுக்கு எளிதாக இருக்கும் என சொல்லப்படுகிறது.