2027ம் ஆண்டுக்குள் நேருநகர் – சிப்காட் இடையே மெட்ரோ இரயில் சேவை தொடங்கு – மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவிப்பு!

2027ம் ஆண்டுக்குள் மூன்றாம் வழித்தடமான நேருநகர் – சிப்காட் இடையே மெட்ரோ இரயில் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2027ம் ஆண்டுக்குள் மூன்றாம் வழித்தடமான நேருநகர் – சிப்காட் இடையே மெட்ரோ இரயில் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ இரயில் சேவைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.61 ஆயிரத்து 843 கோடி செலவிலான 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில், 45.4 கி.மீ. தூரம் கொண்ட மாதவரம்- சிப்காட் இடையேயான 3-ம் வழித்தடத்தில் 20 கி.மீ. தூரம் வருகிறது.

3-ம் வழித்தடத்தில் இடம் பெற்றிருக்கும் தரமணி அருகே உள்ள நேரு நகரில் இருந்து சிறுசேரிக்கு வருகிற 2027-ம் ஆண்டு பகுதியாக ரெயில் சேவையை தொடங்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. நேரு நகர், கந்தன்சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பி.டி.சி. காலனி, ஒக்கியம்பேட்டை, காரம்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் லேக் 1, சோழிங்கநல்லூர் லேக் 2, செம்மஞ்சேரி 1, செம்மஞ்சேரி 2, காந்தி நகர், நாவலூர், சிறுசேரி, சிறுசேரி சிப்காட் 1, சிறுசேரி சிப்காட் 2 ஆகிய வழித்தடத்தில் போக்குவரத்து தொடங்க உள்ளது.

மாதவரம்- சிப்காட் இடையேயான 3-ம் வழித்தடத்தில் மாதவரத்தில் இருந்து தரமணி வரை பூமிக்கு அடியிலும், தரமணியில் இருந்து சிறுசேரி வரை உயர் மட்டத்திலும் பாதை அமைக்கப்படுகிறது. உயர்மட்ட பாதை செல்லும் நேரு நகர் முதல் சோழிங்கநல்லூர் வரை, சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் வரை என 2 ஆக பிரித்து கட்டுமான பணிகளுக்கு கடந்த ஆண்டு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது.

பழைய மாமல்லபுரம் சாலையை ஒட்டிய பல்வேறு இடங்களில் கட்டுமான பணிகள் ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது. நேரு நகர் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான பாதையில் 2027-ம் ஆண்டுக்குள் பணிகள் முடிந்துவிடும். இதன்பின்னர் உடனடியாக சேவையை தொடங்க அதிகாரிகள் முடிவெடுத்து உள்ளனர். இதனால் ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதியில் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.