300 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை- நடமாடும் அங்காடிகளுக்கும் தமிழக அரசு ஏற்பாடு.

300 நியாய விலைக் கடைகள் மூலம் தக்காளி விற்பனை விரிவுப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், நடமாடும் காய்கறி அங்காடிகளை தற்போதும் தேவைப்படும் இடங்களில் மாநகராட்சி மற்றும் தோட்டக்கலை துறை மூலம் தொடங்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்

தமிழகத்தில் காய்கறி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னை – கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை நேற்று கிலோ ரூ.110 ஆக உயர்ந்தது. வெளிச் சந்தைகளில் சில்லறை விலையில் கிலோ ரூ.140-க்கு விற்கப்பட்டது.

இதையடுத்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (10.7.2023) தலைமைச் செயலகத்தில், நடைபெற்றது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “இக்கூட்டத்தின் தொடக்கத்தில், முதல்வர் கடந்த சில வாரங்களாக சில குறிப்பிட்ட வகை மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை நிலவரத்தினை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதை தொடர்ந்து, கூட்டுறவுத் துறை சார்பாக தக்காளி விலையினை கட்டுப்படுத்த சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்து, இதனை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

இது தொடர்பாக அரசின் பல்வேறு துறையைச் சார்ந்த அலுவலர்கள் காய்கறி உள்ளிட்ட குறிப்பிட்ட வகை மளிகைப் பொருட்கள், அனைத்து கூட்டுறவு சங்க அங்காடிகளிலும், நியாய விலைக் கடைகளிலும், சந்தை விலையை விட குறைவாகக் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்றும், தேவைப்பட்டால் இதற்கென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் மேற்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தினார்.

அதேசமயம், அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கப்படுவதைத் கடுமையாகக் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை இதில் கூடுதல் கவனம் செலுத்திடவும் கேட்டுக் கொண்டார். அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தினார்.

மேலும், தமிழகம் முழுவதிலும் உள்ள உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்பனையை அதிகப்படுத்த வேளாண் துறை அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தவேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார். கோவிட் காலத்தில் செயல்படுத்தப்பட்டது போல நடமாடும் காய்கறி அங்காடிகளை தற்போதும் தேவைப்படும் இடங்களில் மாநகராட்சி மற்றும் தோட்டக்கலை துறை மூலம் தொடங்கவும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது, மாநிலம் முழுவதும் செயல்படும் பண்ணை பசுமை அங்காடிகள் மூலம் கூடுதலாக தக்காளி, சிறியவெங்காயம் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படும் என்றும், வெளிச்சந்தை விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக கூட்டுறவு பல்பொருள் அங்காடிகள் மூலம் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு போன்றவை சந்தை விலையைவிட குறைவான விலையில் விற்பனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

300 நியாய விலைக் கடைகள் மூலம் தக்காளி விற்பனை விரிவுப்படுத்தப்படும், நடமாடும் காய்கறி அங்காடிகள் வாயிலாக நகரப் பகுதிகளில் காய்கறிகள் விற்பனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் செயல்படும் உழவர் சந்தைகளில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் தக்காளி, சிறிய வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு இருப்பு விவரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பதுக்கல் செய்வோர் மீது அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.